சிங்கள- தமிழ் கட்சிகள் சுவிஸ்லாந்தில் சந்திப்பு- இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து பரிந்துரைகள் முன்வைப்பு

சிங்கள- தமிழ் கட்சிகள் சுவிஸ்லாந்தில் சந்திப்பு- இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து பரிந்துரைகள் முன்வைப்பு

இலங்கைத்தீவில் நீண்டகாலமாக நிலவி வரும் இனப் பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வு காணும் நோக்கில், சுவிஸ்லாந்து அரசாங்கத்தின் ஏற்பபாட்டில் நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் இன்று புதன்கிழமையும் இடம்பெறுமென தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்கள், ஜேவிபியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் என 19 உறுப்பினர்கள் இலங்கையில் இருந்து கடந்த திங்கட்கிழமை சுவிஸ்லாந்துக்கு சென்றிருந்தனர்.

சுவிஸ்லாந்து அரசியல் யாப்பு முறைமை குறிப்பாக அங்குள்ள சமஸ்டி ஆட்சி முறை உள்ளிட்ட அரசியல் நிர்வாக அமைப்புகள் பற்றிய கலந்துரையாடல் அங்கு இடம்பெறுகின்றது.

அநுர அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் போது இனப்பிரச்சினைக்குரிய தீர்வுகளும் முன்வைக்கப்படுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சுவிஸ்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இங்கு நடைபெறுகின்ற இரண்டு நாள் கலந்துரையாடலில் சிங்கள தமிழ் பிரநிதிநிகள் தங்கள் கருத்துக்களை முன்வைப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த கலந்துரையாடல் தொடர்பாக இலங்கை அரசாங்கம் அதிகாரபூர்வமான இதுவரை கருத்துக் கூறவில்லை. கலந்துரையாடப்பட்ட விடயங்கள் அறிக்கையாக ஒவ்வொரு அரசியல் கட்சிகளிடமும் கையளிக்கப்படும் எனவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This