புதுடில்லி வாகன வெடிப்பு சம்பவம் – தமிழ் நாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

இந்தியத் தலைநகர் புதுடில்லியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன வெடிப்புச் சம்பவத்தை அடுத்து, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழ் நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரத்தியேகமாக மேற்கொள்ளப்படுவதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
சென்னை நகரின் 12 பொலிஸ் பிரிவு மாவட்டங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்களைக் கொண்ட பொலிஸ் குழுக்கள் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகளை மேற்கொண்டு வருவதாக, த இந்து (thehindu) என்ற ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, தமிழ் நாட்டின் இராமநாதன் மாவட்டத்தில் உள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தில், தமிழக பொலிஸார் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் சென்னை, மதுரை போன்ற இடங்களிலும், பொலிஸார் மேலதிக பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புதுடில்லி செங்கோட்டை அருகே திங்கட்கிமை மாலை வாகனம் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டதையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு இந்திய உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளமைக்கு ஏற்ப இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புதுடில்லி, சென்னை, மும்பாய் உள்ளிட்ட பிரதான சர்வதேச விமான நிலையங்களிலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
