ஆளும் கட்சி தலைவரையே கைது செய்ய முயன்ற தென் கொரிய ஜனாதிபதி

ஆளும் கட்சி தலைவரையே கைது செய்ய முயன்ற தென் கொரிய ஜனாதிபதி

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இராணுவச் சட்டத்தை அறிவித்தபோது,
​அவரது சொந்த ஆளும் கட்சியின் தலைவர் ஹான் டோங்-ஹூனை கைது செய்யுமாறும் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது பட்டியலில் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் மற்றும் மூன்று எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்குவதாக அந்நாட்டு தேசிய புலனாய்வு சேவையின் துணை இயக்குனரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

யூன் சுக் யோல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்களைக் கைதுசெய்ய முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசியல் கட்சிகள் இன்று வெள்ளிக்கிழமை அவசரக் கூட்டங்களை நடத்தியுள்ளன. யூன் மீதான குற்றச்சாட்டுக்கு நாடாளுமன்றில் வாக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த செவ்வாய்க்கிழமை (03.12.2024) அந்நாட்டில் அவசரகால இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியதால் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

வடகொரியாவின் கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தென்கொரியாவை பாதுகாக்கும் நோக்கிலும் உள்நாட்டில் தேச விரோத சக்திகளை
ஒழிக்கும் நோக்கிலும் இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியாக அவர் விளக்கமளித்திருந்தார்.

இதன்பின்னர் இந்நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என தென் கொரிய அரசியல்வாதிகள் இராணுவச் சட்டப் பிரகடனத்தை விமர்சித்தனர்.  ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலருமே இதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர்.

அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன. அதுமட்டுமின்றி மக்கள் தொடர்ந்து ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவி விலக வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி வாக்களித்தனர். சட்டத்தைத் திரும்பப் பெற தேசிய சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மொத்தமுள்ள 300 பேரில் 190 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனை தொடர்ந்து தென்கொரிய ஜனாதிபதி அந்த அவசரநிலை இராணுவ சட்டத்தை மீளப்பெறுவதாக அறிவித்தார்.

ஆனாலும் தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தன.
தென் கொரிய ஜனாதிபதி பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் 3 இல் இரண்டு பெரும்பான்மை ஆதரவும், குறைந்தபட்சம் 6 அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகளின் ஆதரவும் தேவைப்படும்

Share This