14 வயது சிறுமி கொலைக்கான காரணம் வெளிவந்தது…மீட்கப்பட்ட உடல்

14 வயது சிறுமி கொலைக்கான காரணம் வெளிவந்தது…மீட்கப்பட்ட உடல்

கம்பஹா, மாகவிட்ட பிரதேசத்தில் 14 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் பல தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இம் மாதம் 2ஆம் திகதியிலிருந்து தனது 14 வயது மகளைக் காணவில்லையென நேற்று முன்தினம் சிறுமியின் தாய் கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு செய்யப்பட்டதன் பின்னர் விசாரணைகளை தொடங்கிய பொலிஸார், கொலைக்கான காரணத்தை கண்டுபிடித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமி, அவரது தாய், தாயின் இரண்டாவது கணவர் ஆகியோர் அகரவிட்ட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வேறு ஒருவருக்கு சொந்தமான வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர்.

சிறுமியின் தாய் ஏக்கல பகுதியிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றிலும் அவரது கணவர் கட்டுமான தொழிலிலும் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமையன்று கணவனும் அவரது மகளும் வீட்டிலிருந்துள்ளனர்.

தாய் பணிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியதும் வீட்டில் மகள் இல்லாதது குறித்து கணவரிடம் விசாரித்துள்ளார்.

அதற்கு, மகள் நண்பரின் குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளதாகவும் மறுநாள்தான் வருவார் என்றும் கணவர் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை வரையில் மகள் வீடு திரும்பாததால் கணவன் மற்றும் மனைவிக்கிடையில் தகராறு ஏற்பட்டு பின்னர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

மேலும் தனது கணவர் மீதும் சந்தேகம் இருப்பதாக அப் பெண் பொலிஸில் கூறியுள்ளார்.

தொடர்ந்து அப் பெண்ணின் கணவரை கைது செய்த பொலிஸார் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதில், கடந்த திங்கட்கிழமை (02) கணவனால் அடகு வைக்கப்பட்ட தங்க நகையை மீட்பதற்காக மகளிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு தந்தையுடன் சென்று நகையை மீட்குமாறு கூறிவிட்டு தாய் வேலைக்குச் சென்றுள்ளார்.

போதைப் பழக்கமுடைய அப் பெண்ணின் கணவர், மகளிடம் இருந்த பணத்தைக் கேட்டுள்ளார்.

மகள் பணத்தைக் கொடுக்க மறுத்ததால் அவரை தாக்கி பணத்தை பறித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றுள்ளார்.

வீட்டுக்கு திரும்பியதும் மகள் தாக்கப்பட்ட இடத்திலேயே உயிரிழந்திருப்பதைக் கண்டு அவரது உடலை பொலித்தீன் பையொன்றில் போட்டு கட்டி, வீட்டின் கழிப்பறைக் குழிக்குள் போட்டு மூடியிருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் கம்பஹா நீதவான் நீதிமன்ற உத்தரவின் பேரில், கழிப்பறைக் குழியில் போடப்பட்டிருந்த மகளின் உடல் மீட்கப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 16.12.2024 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share This