ரணிலின் உடல் நிலை, ஐதேக மாநாடு ஒத்திவைப்பு- சஜித் அணி இணையும் வாய்ப்பு!

ரணிலின் உடல் நிலை, ஐதேக மாநாடு ஒத்திவைப்பு- சஜித் அணி இணையும் வாய்ப்பு!

ரணில் விக்கிரமசங்கவின் உடல் நிலை காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் 79 ஆவது வருடாந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தலா அத்துகோரள ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

எதிரவரும் சனிக்கிழமை 6 ஆம் திகதி நடைபெறவிருந்த வருடாந்த மாநாட்டை ஒத்திவைக்க கட்சியின் நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது என்றும் நேற்று செவ்வாய்க்கிழமை அவர் தெரிவித்தார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் முடிவடைந்த பின்னர் அவர் இத் தகவலை வெளியிட்டார்.

மருத்துவர்களின் ஆலேசனைக்கு அமைவாக நிர்வாகக் குழு மாநாட்டை ஒத்திவைத்தாகவும் வேறொரு நாளில் மாநாடு நடத்தப்படும் எனவும் தலதா அத்துகோரள கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரம் ஓய்வெடுக்கிறார் என்றும், மேலும் மருத்துவ சிகிச்சைக்கு மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மாநாடு நடைபெறும்போது, சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களும் பங்கொள்வர் எனவும் முக்கியமாக சஜித் பிரேமதாச கலந்துகொள்வார் எனவும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

மாநாட்டின் பின்னர் இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும், எதிர்காலத்தில் மீண்டும் முன்னைய ஐக்கிய தேசியக் கட்சியாகவே இயங்கும் சந்தா்ப்பம் அதிகமாகவுள்ளது என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் – சஜித் என்ற இரண்டு அரசியல் தலைவர்களையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில், கொழும்பில் உள்ள சில பிரதான வர்த்தக பிரமுகர்கள் மற்றும் சில சிவில் அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், ரணில் கைது செய்யப்பட்ட பின்னணியில் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை ரணில் – சஜித் ஆகியோர் இணைந்து செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.

நாமல் ராஜபக்ச, அங்கம் வகிகும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ,2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உருவக்கப்பட்டிருந்தது.

அக் கட்சியின் ஆதரவுடன் ரணில் 2022 ஆம் ஆண்டு யூன் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Share This