
இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற விருப்பம் – நேபாள பிரதமா்
இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்ற நேபாளத்தின் புதிய பிரதமா் பாலேந்திர ஷா விருப்பம் தெரிவித்துள்ளாா்.
நேபாளத்தின் 47-ஆவது பிரதமராக பதவியேற்ற பாலேந்திர ஷாவுக்கு இந்திய பிரதமர் தனது எக்ஸ் பதிவு ஊடாக வாழ்த்து தெரிவித்திருந்தார் .இந்தியா-நேபாளம் இடையிலான தொன்மையான நட்புறவை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்ல இணைந்து பணியாற்ற ஆவலாக உள்ளேன்’ என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார் .
இந்தப் பதிவுக்கு பதிலளித்த நேபாள பிரதமா் பாலேந்திர ஷா, ‘பிரதமா் மோடியின் கனிவான வாா்த்தைகள் மற்றும் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியா-நேபாளம் இடையிலான பன்முக உறவுகளை இருநாட்டு மக்களும் பலனடையும் வகையில் மேம்படுத்த நெருங்கி பணியாற்ற விருப்பத்துடன் உள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளாா்.
சரக்குகள்-போக்குவரத்து ரீதியில் இந்தியாவை நேபாளம் பெருமளவில் சாா்ந்துள்ளது. நில எல்லைகளால் சூழப்பட்ட நேபாளத்தின் கடல் அணுகலுக்கு இந்தியா வழியாகவே செல்ல வேண்டும். தனது இறக்குமதியில் பெரும்பகுதியை இந்தியாவிடம் இருந்தோ அல்லது இந்தியா வழியாகவோதான் நேபாளம் மேற்கொள்கிறது. மற்றொருபுறம், இந்தப் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த உத்திசாா் நலன்களுக்கு நேபாளத்துடனான உறவுகள் இந்தியாவுக்கு முக்கியமானதாக உள்ளதாக நேபாள பிரதமர் தெரிவித்துள்ளார் .
அண்டை நாடான நேபாளத்தில் அரசியல் குழப்பங்களுக்கு இடையே இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற பொதுத் தோ்தலில், இளைஞா்களின் செல்வாக்கைப் பெற்ற ‘ராப்’ இசைக் கலைஞரும், காத்மாண்டு நகர முன்னாள் மேயருமான பாலேந்திர ஷா பாலனின் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 275 இடங்களில் 182 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.
