
மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக கைகோர்த்த ‘இணைந்த கரங்கள்’: நிவித்திகலையில் விசேட கற்றல் திட்டம்
சப்பிரகமுவ மாகாணத்தின் நிவித்திகல பிரதேசத்தில் அமைந்துள்ள தொலஸ்வல பாரதி தமிழ் வித்தியாலய மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக, “இணைந்த கரங்கள்” அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேலதிக கற்றல் வகுப்புகள் கடந்த 2ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
பாடசாலை அதிபர் திரு. சொ. செல்வகுமரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில், மாணவர்களின் எதிர்கால கல்வி வளர்ச்சியினை நோக்கமாகக் கொண்டு விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று பாடங்களுக்கான மேலதிக வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாடசாலை அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று, “இணைந்த கரங்கள்” அமைப்பு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், சப்பிரகமுவ மாகாணப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. வடிவேல் சண்முகநாதன் மற்றும் வலயக் கல்வி அலுவலகப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. சகுந்தலா ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அவர்களுடன் இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான திரு. காந்தன், அதிபர் திரு. க. தியாகராஜா, திருமதி க. இந்திராதேவி, எமாலினி பிலிப், க. பங்கயற் செல்வி ஆகியோருடன் வளவாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இப்பயனுள்ள திட்டத்திற்காக ஒரு பாட ஆசிரியருக்கு மாதாந்தம் 12,000 ரூபா வீதம், மூன்று பாடங்களுக்குமாக மொத்தம் 36,000 ரூபா நிதியினை இணைந்த கரங்கள் அமைப்போடு இணைந்து பயணிக்கும் ஜனபாலச்சந்திரன் கோபாலப்பிள்ளை மற்றும் டேனில் செந்து சுகுணராஜன் ஆகிய இருவர் தொடர்ச்சியாக வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
