
பலாலியில் முக்கிய சந்திப்பு: யாழ். கட்டளைத் தளபதியைச் சந்தித்தார் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன்
யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.சில்வா மற்றும் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று மாலை பலாலியில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின்போது, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் கட்டம்கட்டமாக விடுவிக்கப்பட்டமைக்காக ஆளுநர் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன், தொடர்ந்தும் விடுவிக்கப்படாதுள்ள ஏனைய காணிகளை பொதுமக்களின் பாவனைக்காக விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
மேலும், வடமாகாண மாணவர்களிடையே தேசிய மாணவர் படையணியின் செயற்பாடுகளை ஊக்குவிப்பது தொடர்பில் ஆளுநர் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு கட்டளைத் தளபதி பாராட்டுத் தெரிவித்தார்.
மாணவர்களிடையே சிறுவயதிலிருந்தே ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவப் பண்புகளை வளர்க்க இந்த முன்னெடுப்பு உதவும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். இச்சந்திப்பில் இரு தரப்பு உயரதிகாரிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
