கொழும்பில் கடும் மழை. வீதிகளில் போக்குவரத்து நெரிசல் – அலுவலகங்களில் ஊழியர் வருகை குறைவு

தொடர்ந்து மழை பெய்வதால், கொழும்பு நகர வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சில வீதிகளில் வெள்ளம் நிற்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் வாகனச் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பொரள்ளை, மருதானை, இராஜகிரிய பிரதேச வீதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, இலங்கைக்கு கிழக்காக விரிவடைந்து வரும் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை, சில மணி நேரத்தில் குறைவடையும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இன்று பிற்பகல் அல்லது மலை இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என கொழும்பில் உள்ள வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெள்ளப் பெருக்கு ஏற்படலாம் என்றும் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை காலை வரையும் கடும் மழை பெய்துள்ளது.
இந்த மழையினால் அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை குறைவாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தீபாவளி பெருநாளை முன்னிட்டு சைவ பாடசாலைகளுக்கு இன்று செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் பல பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவாக உள்ளதாக அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.