ஜெனிவா கூட்டத் தொடர், தூதுவர்களுக்கு அரசாங்கம் விளக்கம்

ஜெனிவா மனித உரிமை சபை எதிரவரும் 8 ஆம் திகதி கூடவுள்ள நிலையில், கொழும்பில் உள்ள உறுப்பு நாடுகளின் தூதுவர்களை வெளியுறவு அமைச்சின் உயர் அதிகாரிகள் விளக்கமளித்து வருகிறார். மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் தமிழர்கள் விவகாரம் தொடர்பான ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிமை சில உரையாடல்கள் இடம்பெற்றதாக இலங்கை வெளியுறவு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியாக இந்த உரையாடல்கள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவியேற்று ஒரு வருடம் நிறைவடைவதற்கு முன்னர் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், வடக்குக் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் அதிகளவு மக்கள் பிரதநிதிகளை தமது அரசாங்கத்துக்காக தெரிவு செய்துள்ளதாகவும் உயர் அதிகாரிகள் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகின்றது.
ஆணையாளர் அனுப்பிய முன்னோடி கடிதம் குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது எனவும் தூவர்களிடம் சுட்டிக்காட்டியதாக அறிய முடிகிறது.
வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்தின் உத்தரவுக்கு அமைவாக, ஆணையாளரின் கடிதம் குறித்து துறைசார்ந்த சட்ட வல்லுநர்கள் ஆராய்ந்து வருவதாகவும, புதிய அரசாங்கத்துக்கு ஜெனீவா மனித உரிமைச் சபை சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென கேட்டுக்கொண்டதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை வெளியுறவு அமைச்சர் விஜத ஹேரத்தும் உறுப்பு நாடுகளின் தூதுவர்களை சந்திக்கவுள்ளார்.
ஜேவிபியை மையப்படுததிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இலங்கைத்தீவில் மீள் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது என்ற நிலைப்பாடு அரசாங்கத்திடம் உண்டு. இதனை ஜெனிவாவுக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விஜித ஹேரத் தலைமையில் குழு ஒன்றும் ஜெனிவாவுக்கு பயணம் செய்யவுள்ளது. 2020 ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் தீர்மானத்தை நிராகரித்தது.
இலங்கை முப்படைகள் மற்றும் பாதுகாப்பு உயர் அதிகாரிகள் எவரையும் காட்டிக் கொடுக்கும் நோக்கம் இல்லை என ஜேவிபி ஏற்கனவே கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.