
வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் முன்னெடுக்கப்படுகிறது
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது.
அரசியல் தலையீடுகளின் அடிப்படையில் வைத்தியர்களின் இடமாற்றங்களை முன்னெடுப்பதை நிறுத்துதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தது.
இன்று காலை 8.00 மணி முதல் மீண்டும் பணிப்பகிஷ்கரிப்பை நாடு முழுவதும் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இருப்பினும், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை, விசேட சிறுநீரக அலகுகள், முப்படை வைத்தியசாலைகள் மற்றும் தேசிய மனநல நிறுவனம் ஆகியவற்றில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படாது என அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.
இன்று கூடவுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக் கூட்டத்தில், ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் மேலதிக தீர்மானங்கள் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .
