இந்தியா – பாகிஸ்தான் மோதலும் வெளிப்பட்டுள்ள புவிசார் அரசியல் உறவும் – ஆழமாக ஆராயும் அநுர

இந்தியா – பாகிஸ்தான் மோதலும் வெளிப்பட்டுள்ள புவிசார் அரசியல் உறவும் – ஆழமாக ஆராயும் அநுர

பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், நிலப்பரப்பு அடிப்படையில் மிகவும் பெரியது. அப் பகுதியைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பலுசிஸ்தான் போராளிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர் .

ஆனால், அந்தப் போராளிகளுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கி வருவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சுமத்தி வரும் நிலையில், காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் உதவியளிப்பதாக இந்தியா குற்றம் சுமத்தி வருகின்றது.

பழங்குடி மக்களை அதிகம் கொண்ட பலுசிஸ் தேசிய இன விடுதலைப் போராளிகளை அமெரிக்கா, பிரித்தானியா உட்பட ஐரோப்பிய ஒன்றியமும் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ள நிலையிலும், 2004 ஆம் ஆண்டு பலுஸ் இன மக்களின் தன்னாட்சி கோரி, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பலுசிஸ் தேசிய விடுதலை இராணுவம் போராடி வருகின்றது.

அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள்

காஷ்மீர் போராளி இயக்கங்கள் சிலவற்றை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் பெரிய அளவில் தடை விதிக்கவில்லை. ஆனால் , பலுசிஸ் இன தேசிய விடுதலை இராணுவத்தை நோக்கி பல தடைகள் விதிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்தியா மாத்திரம் பலுசிஸ் போராளிகளுக்கு ஒத்தழைத்து வருகின்றது.

இப்பின்னணியிலேயே இந்தியா – பாகிஸ்தான் மோதல் 2000 ஆம் ஆண்டில் இருந்து மேலும் தீவிரமடைந்து வருகின்றது. காஷ்மீர் பஹல்காமில் கடந்த மாதம் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீர் போராளிகள் சுற்றுலா பயணிகள் 26 பேரை கொலை செய்த பின்னர் ஏற்பட்ட முறுகல், கடந்த சில நாட்களாக இந்திய பாகிஸ்தான் இராணுவ மோதலாக மாறியுள்ளது.

சென்ற 8 ஆம் திகதி வியாழக்கிழமை இந்தியா நடத்திய தாக்குதலில் லாகூர் நகரை பாதுகாக்க பாகிஸ்தான் இராணுவம் பல வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ளது. பாகிஸ்தான் இராணுவம் ஏவிய சீன தயாரிப்பான எச்க்யூ – 9 பி ஏவுகணை தடுப்பு ஆயுதங்களை தாக்கி அழித்துள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது.

சீன தயாரிப்பு ஏவுகணைகளை இந்தியா தடுத்து அழித்தமை தொடர்பாக தற்போது உலக அரங்கில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. இது பரபரப்பான தகவல் என்று இந்திய ஊடகங்கள் வர்ணிக்கின்றன..

ஜம்மு விமான நிலையம், சம்பா, ஆர்எஸ் புரா, ஆர்னியா உள்ளிட்ட பகுதிகளை நோக்கி பாகிஸ்தானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. அங்கிருந்து ஏவப்பட்ட சீனத் தயாரிப்பு, எஸ் -400 என்ற தடுப்பு மையங்கள் முறியடித்தன..

இதையடுத்து இந்தியா மீது மீண்டும் வியாழக்கிழமை இரவு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை வரை கடும் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தான் இராணுவம் ஏவிய 7 ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விமான தளத்தில் தாக்குதல் நடத்த முற்பட்ட நிலையில், இந்திய விமானப்படை பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தியாவின் இத் தாக்குதல் குறித்து வெள்ளிக்கிழமை இரவு கருத்து வெளியிட்ட அமெரிக்க பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின், இந்திய இராணுவத்தை பாராட்டியிருக்கிறார். நன்கு திட்டமிட்டு இந்தியா தாக்கியுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

எஸ் 400 என்ற தடுப்பு ஏவுகணை

பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை அழிக்க இந்திய இராணுவம் பயன்படுத்திய எஸ் 400 என்ற தடுப்பு ஏவுகணை ரசியத் தயாரிப்பா என்று சர்வதேச ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையிலேயே அமெரிக்கப் பென்டகனின் முன்னாள் அதிகாரி பாராட்டியுள்ளமை கவனிக்கத்தக்கது.

இப் பின்னணியில்தான் சீனாவின் எச்க்யூ 9 பி என்பது என்ன என்பது பற்றியும் அதனை இந்திய இராணுவம் அழித்தது ஏன் என்ற கேள்விகள், விமர்சனங்கள் தற்போது முன்வைக்கப்படுகின்றன. சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் அதிக அளவு சக்தி வாய்ந்த ஆயுதங்களை கொள்வனவு செய்கிறது.

எஎ போர் விமானங்கள், ஏவுகணை தடுப்பு ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்குத் தேவையான அனைத்து ஆயுதங்களையும் சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் கொள்வனவு செய்வதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

சீனாவில் எச்க்யூ 9 வான்வெளி பாதுகாப்பு முறைமை.(HQ 9 Air Defence System) பயன்பாட்டில் உள்ளது. இதனை தமக்கு வழங்குமாறு பாகிஸ்தான் சீனாவிடம் 2015 இல் கோரியது. இதன் காரணத்தால் சீனா பாகிஸ்தானுக்கு என்று கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் தனியாக ஒன்றை தயாரித்து வழங்கியுள்ளது. ”எச்க்யூ 9பி வான்வெளி பாதுகாப்பு முறைமை” என்ற பெயர் கொண்ட இந்த ஆயுத பரிமாற்றம் தொடர்பாக ஏற்கனவே இந்தியா அதிருப்தி வெளியிட்டிருந்தது.

இந்த ஆயுதத்தில் உள்ள P என்ற எழுத்து பிரத்தியேகமாக பாகிஸ்தானை குறிக்கும். சீனாவில் பயன்படுத்தும் இந்த ஆயுதத்தில் அந்த P என்ற எழுத்து இல்லை. இந்நிலையில் தான் லாகூரை பாதுகாக்க, பாகிஸ்தான் சீனாவின் எச்க்யூ 9 பி வான் பாதுகாப்பு முறைமையை நிறுவி இருந்தது. இதனை பாகிஸ்தான் 2021ம் ஆண்டில் இருந்து பயன்படுத்தி வருவதாக அதானி குழுமத்தின் ஆங்கில ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது வானில் 125 கிலோமீட்டர் தொலை தூரத்தை கொண்டது. இது போர் விமானங்கள், குரூஸ் வகை ஏவுகணைகள் போன்றவற்றை 100 கிலோ மீட்டர் தூரத்திலேயே கண்டுபிடித்து அழிக்கும் வல்லமை கொண்டது. ஆனால் பாகிஸ்தான் ஏவிய இந்த சீன ஏவுகணையை, இந்திய இராணுவம் தாக்கி அழித்தமை தொடர்பாக இந்திய ஊடகங்கள் பாராட்டும் விமர்சனங்களை முன்வைக்கின்றன.

அதேவேளை, எச்க்யூ 9பி ஏர் பாதுகாப்பு (Defense) மூலமான தாக்குதல் முறைமையை, பதில் தாக்குதல் நடத்தி அழிக்க இந்திய இராணுவம் பயன்படுத்திய ட்ரோன் இஸ்ரேல் தயாரிப்பு என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் ட்ரோன்

இஸ்ரேல் நாட்டின் நவீன ட்ரோன் தான், பாகிஸ்தான் ஏவிய சீனத் தயாரிப்பு ஏவுகணைகளை குறி தப்பாமல் தாக்கி அழித்தது என்று இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி உறுதி செய்திருக்கிறார்.

இஸ்ரேல் தயாரிப்புகளை பயன்படுத்தியே வியாழக்கிழமை இரவும் தாக்குதல் முறியடிக்கப்பட்டது என்று விக்ரம் மிஸ்ரியை மேற்கோள் காண்பித்து இந்திய ஆங்கில ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்தி வெளியிட்டிருக்கின்றன.

இந்தியா பயன்படுத்திய ட்ரோன், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் என்ற ஆயுத உற்பத்தி நிறுவனம் உருவாக்கியதாகும். ரேடார் மற்றும் வான்வெளி பாதுகாப்பு முறைகளை துல்லியமாக தாக்குவது தான் இதன் சிறப்பாகும். இந்த ட்ரோனால் 9 மணிநேரம் வரை இடைவிடாது பறக்கக் கூடியது என்று இந்திய இராணுவ ஆய்வாளர்கள் கூறுவதாக இந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அதேநேரம் பலுசிஸ் தேசிய இன விடுதலை போராளிகள் பாகிஸ்தான் இராணுவம் மீது தாக்குதல்களைத் தொடர்ந்துள்ளது என்றும், இதற்கு இந்தியா பின்னணி எனவும் பாகிஸ்தான் ருடே (pakistan today) என்ற ஆங்கில ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.

காஷ்மீர் போராளிகள் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இல்லை எனவும், பாலுஸிஸ் போராளிகளை பாகிஸ்தானுக்கு எதிராக தூண்டி விடவே, இந்தியா, பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்தி உள்ளதாகவும் அந்த ஊடகம் விமர்சிக்கிறது.

புவிசார் அரசியல் – பொருளாதார நோக்கில் அமெரிக்க, இந்திய மற்றும் இஸ்ரேல் உறவும், சீன பாகிஸ்தான் உறவும் இந்த மோதல் மூலம் வெளிப்பட்டுள்ளது. அதேநேரம் இந்திய ரசிய உறவும் இராணுவத் தளபாடங்கள் பரிமாற்றமும் வெளிப்பட்டுள்ளன.

ஆனால், டொனால்ட் டிரம்ப் மறைமுக ரசிய சார்ப்புத் தன்மையுடன் செயற்படுவதால், இந்தியாவுக்கு தற்போதைக்கு அது பாதுகாப்பானதாகவே இருக்கும். இந்த நிலைமை இலங்கைக்கும் சாதகமானதே.

பலுசிஸ் தேசிய இன விடுதலை போராளிகளுக்கு இந்தியா ஆதரவு வழங்கும் பின்னணிகள் மற்றும் பாகிஸ்தான் மீதான குற்றச்சாட்டுக்கள் பற்றி மகிந்த ராஜபக்ச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இலங்கை இராஜதந்திரிகள் ஆய்வு நடத்தி இருந்ததை தமிழ்த் தரப்பு கவனத்தில் எடுக்க வேண்டும்.

அநுரவின் அவதானிப்பு

தற்போதைய அநுர அரசாங்கமும் அமெரிக்க இந்திய உறவு மற்றும் சீன உறவுகளை பயன்படுத்தும் உத்திகள் கூட, சமகால புவிசார் அரசியல் – பொருளாதார நிலைமைகளை ஆழமாக அறிந்து காய் நகர்த்துவதாகவே உள்ளது .

காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடத்திய தாக்குதலை கண்டித்தும், மோடிக்கு அனுதாபம் தெரிவித்து அநுர அனுப்பிய அனுதாபச் செய்தியின் உள்ளடக்கமும் முக்கியமானது. அதேநேரம் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து ஜெனீவா மனித உரிமைச் சபையில் சீனா முன்வைத்த பரிந்துரைகள் பற்றி அநுர அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது.

குறிப்பாக உள்நாட்டு மோதல்களில் சர்வதேசம் தலையிடாத முறையில் மனித உரிமை விவகாரங்கள் பற்றி சீன முன்வைத்துள்ள காரண – காரியங்களை அநுர அரசாங்கம் தீவிரமாக பரிசீலிக்கிறது.

இப் பின்னணியில் தமிழர் தரப்பு சர்வதேச நிலைமைகளையும் சர்வதேசத்தை நோக்கிய அநுரவின் காய் நகர்த்தல்கள் பற்றியும் ஆராயாமல் வெறுமனே தேர்தல்களில் மாத்திரம் கவனம் செலுத்துவது ஆபத்தான ஒன்று.

-அ.நிக்ஸன்-
Share This