மரணத் தருவாயில் மனிதர்கள் பேசும் அந்த 5 விஷயங்கள் – உங்கள் கண்களைக் கசிய வைக்கும் உண்மை!

மரணத் தருவாயில் மனிதர்கள் பேசும் அந்த 5 விஷயங்கள் – உங்கள் கண்களைக் கசிய வைக்கும் உண்மை!

பிறப்பு எப்படி அமைந்தது என்பது நம் யாருக்கும் நினைவிருப்பதில்லை. ஆனால், மரணம் நெருங்கும் தருணத்தை இன்று பலரும் உணர்கிறார்கள். இன்னும் சில மணிநேரங்கள் அல்லது சில நாட்களில் இந்த உடல் உயிர் பிரியப் போகிறது என்பதை உணரும் அந்த இறுதி நிமிடங்களில், ஒரு மனிதனின் சிந்தனை, பேச்சு மற்றும் செயல் எப்படி இருக்கும்?

இன்று பெரும்பாலான மரணங்கள் மருத்துவமனைகளிலேயே நிகழ்கின்றன. உறவினர்களை விடவும், நோயாளிகளுடன் அருகிருந்து கவனிக்கும் செவிலியர்களே (Nurses) அந்த இறுதி நிமிடங்களின் சாட்சிகளாக இருக்கிறார்கள். அவர்கள் பகிர்ந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மரணத் தருவாயில் இருப்பவர்களின் மனநிலை குறித்து இதோ சில நெஞ்சை நெகிழவைக்கும் தகவல்கள்:

உறவுகளின் அரவணைப்பு

மரணத்தை எதிர்நோக்கியிருப்பவர்கள் பணம், புகழ், பதவி அல்லது சொத்து பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசுவதில்லை. அவை எதற்கும் அந்தத் தருணத்தில் அர்த்தமில்லை என்பதை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அதற்குப் பதிலாக அவர்கள் வேண்டுவது எல்லாம்:

  • “என் கையை ஆதரவாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.”

  • “என் அருகிலேயே இருங்கள், என்னை விட்டு விலகிப் போகாதீர்கள்.”

  • “தனிமை பயமாக இருக்கிறது.”

தீராத ஏக்கங்களும் வருத்தங்களும்

வாழ்நாளில் எதையோ தேடி ஓடியவர்கள், கடைசியில் அன்பைத் தொலைத்ததை எண்ணி வருந்துகிறார்கள்.

  • “நான் பாசத்தைக் காட்டுவதற்கு நேரமே ஒதுக்கவில்லை.”

  • “நான் நேசித்தவர்கள் என்னை விரும்பவில்லை; என்னை விரும்பியவர்களை நான் நேசிக்கவில்லை.” போன்ற ஆதங்கங்களே அவர்கள் மனதில் மிஞ்சியிருக்கிறது.

அன்பே பிரதானம்

மரணத்தின் விளிம்பில் மனிதனுக்குப் புரிவது அன்பு மட்டுமே. தனிமையில் மரணமடைவதை யாரும் விரும்புவதில்லை. யாராவது அன்புடன் பேசி, பாசத்துடன் கையைப் பிடிப்பார்களா என்று வாசலைப் பார்த்தபடிதான் பல உயிர்கள் பிரிகின்றன.

அவர்கள் கேட்கத் துடிக்கும் அந்த “அதிசய” வார்த்தைகள்!

வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதம் என்பது, இறுதி நேரத்தில் இனிமையான வார்த்தைகளைக் கேட்பதுதான். உங்கள் அன்புக்குரியவர்கள் அத்தகைய தருணத்தில் இருந்தால், அவர்களிடம் இந்த வார்த்தைகளைக் கூறுங்கள்:

  • “உங்களை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்.”

  • “உங்கள் அன்பு உயர்வானது, உங்கள் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கிறோம்.”

  • “உங்கள் அன்பை எங்களால் மறக்கவே முடியாது.”

  • “நீங்கள் எங்களுக்குச் சிறந்த வழிகாட்டியாக இருந்தீர்கள்.”

  • “எங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் எங்கள் மனதிலேயே இருப்பீர்கள்.”

உண்மையோ, பொய்யோ… இத்தகைய ஆறுதல் வார்த்தைகள் மரணப் படுக்கையில் இருப்பவர்களுக்கு மிகுந்த நிம்மதியையும், அமைதியையும் தரும்.

வாழ்க்கை என்பது ஓடுவதற்காக மட்டுமல்ல, நேசிப்பதற்காகவும் தான். எதன்பின்னோ ஓடிக்கொண்டிருக்கும் நாம், சக மனிதர்களிடம் அன்பைப் பகிர மறக்கிறோம். மரணத் தருவாயில் தேடும் அன்பை, இப்போதே வாழும் காலத்தில் அனைவருக்கும் பகிர்ந்தளிப்போம். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்!

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )