பிலிப்பைன்ஸ் சூறாவளி பலர் உயிரிழப்பு, வெள்ளத்தினால் நிவாரணப் பணிகள் தாமதம்

பிலிப்பைன்ஸ் நாட்டில் கல்மேகி (Kalmaegi) என்ற சூறாவளியினால் இதுவரை 60 இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். தொடராகப் பெய்த கடும் மழையினால் வெள்ளப் பெருக்கில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் வீடுகள் – கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் நியூஸ்வீக் (newsweek) என்ற ஆங்கில செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். பிரதேசத்தில் இருந்து சுமார் 200,000 இற்கும் மேற்பட்ட மக்கள் அசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனாலும் சேத விபரங்கள் இன்னமும் மதிப்பிடப்படவில்லை என நியூஸ்வீக் செய்தித்தளம் தெரிவித்துள்ளது.
கன மழை தொடருவதால், மீட்புப் பணியாளர்கள் உதவி வழங்குவதற்கு செல்ல முடியாது என்றும், ஆனாலும் மழை ஓயும் வரை பணியாளர்கள், பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் செல்வதற்காக காத்திருக்கிறார்கள் எனவும் சிவில் பாதுகாப்பு அலுவலகத்தின் துணை நிர்வாகி ரஃபேலிட்டோ அலெஜான்ட்ரோ ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் சுற்றுலா மையமான செபுவின் பகுதிக்கு தெற்கே உள்ள மின்டானாவ் தீவில் நிவாரணப் பணிகளுக்காகச் சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியதால், ஆறு இராணு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
செபுன் பிரதேசத்தில் 13 பேரை காணவில்லை. மேலும் பலர் வெள்ளத்தில் சிக்குண்டிருக்கலாம். குறிப்பாக இப் பிரதேசத்தில் சுற்றுலா பயணிகள் தங்கியிருப்பதாகவும், அவர்களை மீட்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கி சுமார் 300 இற்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. பல வாகனங்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பல இடங்களில் மின்சாரம், தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதேநேரம் 180 இற்கும் அதிகமான விமான சேவைகள் காலவரையறையின்றி இரத்துச் செய்யப்படடுள்ளன.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வடக்கு செபுவில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு டசின் கணக்கானக்கில் மக்கள் உயிரிழந்து ஆயிரக்கனக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். தற்போது, டினோ என்று அழைக்கப்படும் கல்மேகி சூறாவளியினால் மக்கள் மேலும் பேரழிவை சந்தித்துள்ளனர்.
இதேவேளை, இச் சூறாவளி தொடர்பாக வியட்நாம் அரசாங்கம் தமது நாட்டு மக்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
