மருத்துவர் சங்க வேலை நிறுத்த போராட்டம் ஒத்திவைப்பு – அமைச்சருடன் உரையாடல்

இலங்கை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணிக்கு, வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு முழுவதிலும் ஆரம்பிக்கப்படவிருந்த பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை, தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளது.
சுகாதார அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக மருத்துவர் சங்கம் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று வியாழக்கிழமை இரவு விரிவான பேச்சு நடத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கபபட்டுள்ளது.
கலந்துரையாடலின் போது, நடைமுறைக்கு மாறாக சுகாதார அமைச்சு மேற்கொள்ளவிருந்த சர்ச்சைக்குரிய மருத்துவர்களின் இடமாற்றத்தை இடைநிறுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டது.
இடமாற்றங்கள் உரிய முறையின்படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் மேற்கொள்ளப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் சங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நிர்வாக மருத்துவர்களின் விசேட கூட்டத்தில் இந்த உடன்படிக்கைகள் மேலும் உறுதிப்படுத்தப்பட உள்ளதாக மருத்துவர் சங்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், ஒப்பந்தங்கள் எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படும் வரை, வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்த இணக்கம் ஏற்பட்டுள்ளது எனவும் அந்த அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளது.
ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், எந்த நேரத்திலும் வேலைநிறுத்தப் போராட்டம் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் மருத்துவர் சங்கம் மேலும் எச்சரித்துள்ளது.
