சீன கம்யூனிஸ்ட் கட்சி – ஜேவிபி புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து, அமைச்சர் பிமல் தகவல்

அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், சீனாவுடன் அரசியல் உறவை மிக ஆழமாகவும் சோசலிச கொள்கைக்கு ஏற்ப மேம்படுத்தவும் எடுத்துள்ள செயற்பாடுகளின் ஒரு பகுதியாக, ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பிரதான அங்கமான ஜேவிபி, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPC) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட்டுள்ளது.
ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினரான, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க அண்மையில் சீனாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன் உரையாடினார்.
குறிப்பாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேசத் துறைத் தலைவர் லியு ஹைக்சிங் (Liu Haixing) உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் ரத்நாயக்க தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
சீனாவை மீண்டும் கட்டியெழுப்ப, ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவது, மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது, முற்போக்கான சீர்திருத்தங்கள் மூலம் வளர்ச்சியை உந்துதல், வலுவான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் கட்சி ஒழுக்கத்தை பேணுதல் ஆகியவற்றில் CPC இன் அர்ப்பணிப்பு குறித்து சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் விரிவாக பேசியுள்ளதாக அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நலன் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது எனவும் தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் கட்சியின் சர்வதேசத் துறையின் தலைவராக இருந்த 61 வயதான லியு ஜியான்சாவோவுக்குப் பதிலாக, லியு புதிய பதவியில் பொறுப்பேற்றார். லியு ஹைக்சிங் முன்னர் தேசிய பாதுகாப்பை மேற்பார்வையிடும் சக்திவாய்ந்த கட்சியின் மூத்த செயற்பாட்டாளராக பணியாற்றினார். அவர் 1980 களில் பாரிஸில் படித்தார். அவர் ஐரோப்பிய விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர்.
ஐக்கிய தேசியக் கட்சி,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இலங்கையின் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுடனும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறவை பேணுகிறது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்த வருட ஆரம்பத்தில் பீஜிங்கிற்கு பயணம் செய்தார். பிமல் ரத்நாயக்கவின் பயணத்தில், அப்போது கலந்துரையாடப்பட்ட பகுதிகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. பிமல் ரத்நாயக்காவுக்கு முன்னதாக, ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சீனாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து, சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
