இந்திய – ஆப்கானிஸ்தான் புதிய உறவு, முதலீட்டாளர்கள் காபூல் செல்லும் சந்தர்ப்பம்

இந்தியா – ஆப்கானிஸ்தான் புதிய உறவு தொடர்பாக அயல்நாடான பாகிஸ்தான் கோபமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்திய – ஆப்கானிஸ்தான் உறவு இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்ற தொனியில் என்டிரிவி (ndtv) ஊடகம் விமர்சனம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படையினர் வெளியேறிய பின்னர், 2021 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
அன்றில் இருந்து இந்த ஆண்டு முற்பகுதி வரையும் பாகிஸ்தான் அரசுடன் உறவைப் பேணி வந்த தலிபான்கள், இந்திய அரசுடன் புதிய உறவை பேண ஆரம்பித்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இராஜதந்திர உறவு முறிவடைந்துள்ளது.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் மோதல் ஏற்பட்டு இரு தரப்புக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் இரு நாடுகளும் உறவை முறித்துக் கொண்டன. இரண்டு நாடுகளும் சமாதான பேச்சில் ஈடுபட்டபோதும் அது வெற்றியளிக்கவில்லை.
இந்த நிலையில் தான் தாலிபன் நிர்வாகத்தின் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி சமீபத்தில் ஆறு நாள் பயணமாக இந்தியா சென்றிருந்தார். ஆப்கானிஸ்தானில் தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் தாலிபன் அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் இந்தியாவுக்கு இராஜதந்திர பயணம் ஒன்றை மேற்கொண்டமை இதுவே முதற் தடவையாகும் என பிபிசி (BBC) ஆங்கில செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
அரசியல் – பொருளாதார விவகாரங்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் இந்தியா செய்ய வேண்டிய முதலீடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் புதுடில்லியில் விரிவாகப் பேசப்ட்டன. இப் பேச்சின் பின்னர் இந்தியா ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள தூதரகம் ஒன்றை அமைக்கவுள்ளதாக வாக்குறுதி வழங்கியதாகவும் பிபிசி கூறுகின்றது.
மிக வரைவில் இந்திய தூதரகம் காபூலில் திறக்கப்படும் என புதுடில்லி ஊடகங்கள் இன்று திங்கட்கிழமை செய்தி வெயிட்டுள்ளன. அத்துடன் பாகிஸ்தான் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பற்றியும் இந்திய ஊடகங்கள் விமர்சித்துள்ளன.
2021 ஆம் ஆண்டு தாலிபன்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியபோது பாகிஸ்தான் அதனை வரவேற்றது. பாகிஸ்தானில் கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பாகிஸ்தான் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதை பாராட்டியிருந்தனர்.
இந்தியாவுக்கு அது பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. ஆப்பானிஸ்தானில் உள்ள சில தீவிரவாதக் குழுக்கள் புதுடில்லிக்குள் ஊடுருவி தாக்குதல்களில் ஈடுபடக் கூடும் என இந்திய அச்சமடைந்திருந்தது.
ஆனால் எதிர்பார்த்ததையும்விட சில ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் ஏற்பட்ட அரசியல் மற்றும் இராணுவ ரீதியான மோதல்கள் எல்லைப் பிரச்சினைகள் முரண்பாட்டை உருவாக்கியுள்ளன. இப் பின்னணியில்தான் ஆப்கானிஸ்தான் இந்தியாவுடன் உறவை பேண விரும்பியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கின்றனது.
பாகிஸ்தானில் நடைபெற்ற பல தீவிரவாதத் தாக்குதல்களில் தஹ்ரீக்-இ-தாலிபன்( TTP) தொடர்பு இருந்தாக பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது குற்றம் சுமத்தியிருந்தது.
தஹ்ரீக் – இ – தாலிபன் தீவிரவாதிகளை இல்லாதொழிக்கவும், அதன் தலைவர்களைப் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கவும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை பாகிஸ்தான் வலியுறுத்தி வருந்தது. ஆனாலும் அதற்கு தலிபான்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
இப் பின்புலத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையில் மோதல்கள் ஆரம்பித்தன. இந்த முரண்பாடுகள் காரணமாக ஆப்கானிஸ்தான், இந்தோ – பசுபிக் பிராந்தில் மிகப் பெரிய ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவின் ஒத்துழைப்பை நாடியுள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்திய ஊடகங்கள் இந்திய – ஆப்கானிஸ்தான் உறவை வரவேற்கின்றன. அடுத்து வரும் சில வாரங்களில் இந்திய முதலீட்டாளர்கள் ஆப்கானிஸ்தான் நோக்கிச் செல்லக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.