பெண் கொலை, கண்டனப் பேரணிக்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் தடை, நீதி விசாரணைக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்தில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து நடத்தப்படவிருந்த போராட்டத்திற்கு ஊர்காவற்துறை நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
யாழ் காரைநகர் பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான, சுரேஷ்குமார் குலதீபா என்ற இளம் குடும்பப் பெண்ண் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உறவினர்களும் பிரதேச மக்களும் கணடன போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்திருந்தனர்.
கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கே இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கண்டனப் பேரணி நடைபெற்றால், அது விசாரணைக்கு இடையூறாக அமையும் என்றும், தேவையற்ற பிரச்சினைகள் எழும் எனவும் காரணம் கூறி, போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
உரிய முறையில் சந்தேகநபா்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியதுடன், எதிர்ப்பு போராட்டங்கள் பொலிஸ் விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகவே கண்டனப் பேரணி அவசியமற்றது என நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. உறவினர்களும் பிரதேச மக்களும் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டனர். விசாரணைகள் துரிதமாக நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்ற வளாகத்தில் வைத்து பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.
பெண் கொலை செய்யப்பட்டமை தொடர்பாக கிளிநொச்சி. வவனியா மற்றும் பெண்ணின் சொந்த ஊரான காரைநகர் பிரதேசங்களில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.