தமிழ்த் தேசியக் கட்சிகளின் முரண்பாடுகளை சாதகமாக்கிய ஜெனீவா அறிக்கை! இலங்கை தப்பிக்க வாய்ப்பு

தமிழ்த் தேசியக் கட்சிகளின் முரண்பாடுகளை சாதகமாக்கிய ஜெனீவா அறிக்கை!
*ரோம் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடவில்லை. இதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சர்வதேச நீதி விசாரணையை கோர முடியாது.
*சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதற்கு அரசு ஒன்றின் ஒத்துழைப்பு தேவை.
அ.நிக்ஸன்-
2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சூழலில் ஈழத்தமிழர்களிடம் காணப்படும் உள்ளக முரண்பாடுகள் குறிப்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளிடையே நீடித்து வரும் முரண்பாடுகளை ஜெனீவா மனித உரிமைச் சபை கன கச்சிதமாகப் பயன்படுத்தி வருவதையே 2025 ஆம் ஆண்டு தீர்மானம் தெளிவாக காண்பிக்கிறது.
அத்துடன், இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு உட்பட தேர்தல்களில் போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்துச் செயற்படும் முறைமைகளினாலும் (System) இலங்கை நீதித்துறைக்கு அமைவான உள்ளக விசாரணைக்கு ஜெனீவா தீர்மானம் பரிந்துரைத்துள்ளது என்பதும் கண்கூடு.
விடுதலை கோரி போராடும், அரசு அற்ற சமூகம் இனம் ஒன்றை ஐக்கியநாடுகள் சபை எவ்வாறு கையாளுகின்றது என்பதற்கு உலகில் பல உதாரணங்கள் உண்டு. ஆனாலும், இரண்டு பொருத்தமான உதாரணங்கள் மிக முக்கியமானவை.
ஒன்று – 2002 ஆம் ஆண்டு நோர்வேயின் ஏற்பாட்டில் இலங்கை அரசாங்கம் புலிகளுடன் நடத்திய சமாதானப் பேச்சு 2006 ஆம் ஆண்டு முறிவடைந்து மீண்டும் போர் ஆரம்பித்தமை.
இரண்டாவது – 2025 ஒக்ரோபர் மாதம் செய்யப்பட்ட இஸ்ரேல் – ஹமாஸ் இயக்கம் போர் நிறுத்தம்.
சிறிய அரசாக இருந்தாலும் அல்லது வல்லரசுகளாக இருந்தாலும் அரசுக்கு அரசு அணுகுமுறை என்பதுதான் ஐநாவின் பிரதான கருத்தியல். இப் பின்னணியில் ஒரு நாட்டுக்குள் அரசியல் விடுதலை கோரிப் போராடும் இனம் ஒன்றின் சுயநிர்ணய உரிமைகளை ஏற்கக் கூடிய முறைமை ஒன்று ஐநாவிடம் இல்லை.
முடிந்தவரையும் பிராந்திய வல்லரசுகளின் நலன் கருதியும், இன மோலை எதிர்கொண்டுள்ள அரசு என்ற கட்டமைப்பின் தேவைக்காகவும் அரசு அற்ற இனங்களின் அரசியல் விடுதலை குறிப்பாக சுயநிர்ணய உரிமை என்பதை மறுதலிக்கும் போக்கு அதிகமாகவுள்ளது.
இப் போக்கை பாலஸ்தீன விவகாரத்தில் அதாவது ஹமாஸ் இயக்கத்தை அமெரிக்க அரசு போர் நிறுத்தம் என்ற பெயரில் அடிபணிய வைத்திருப்பதன் ஊடாக புரிந்துகொள்ள முடியும்.
காசாவில் ஏற்பட்டுள்ள அழிவுகளின் அவலங்கள், மக்களின் அடிப்படை வாழ்க்கைப் பிரச்சினைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, ஹமாஸ் இயக்கம் தற்போதைக்குத் தங்களுக்கு பொருத்தமில்லாத போர் நிறுத்தம் ஒன்றுக்குச் சம்மதித்திருக்கிறது போலும்.
இந்தோ – பசுபிக் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு அமெரிக்கா – இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகளின் ஐநா ஊடான அணுகுமுறையின் வெளிப்பாடுதான் 2002 இல் சமாதானம் என்ற போர்வையில் புலிகளுடன் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு பின்னா் இலங்கை அரசு என்ற கட்டமைப்பை மேலும் பாதுகாக்கும் உத்திகள் வகுக்கப்பட்டன.
அதேநேரம், 2009 இற்குப் பின்னரான காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து ஒவ்வொரு கட்சிகளும் தனிக் தனிக் கட்சிகளாக இயங்கியதன் விளைவுகளும், தேர்தல் அரசியல், கட்சி அரசியல் ஈடுபாடுகள் மேலோங்கி அதன் மூலமாக முரண்பாடுகள் எழுந்துள்ளதையும் இந்தியா உள்ளிட்ட வல்லாதிக்க நாடுகள் நன்கு அவதானித்து அதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டன.
இதன் காரண – காரியத்தாலேயே, 1950 களில் ஆரம்பிக்கப்பட்ட இன அழிப்பில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டிய சர்வதேச முறையிலான பாதுகாப்புக்கான “இறைமை” “சுயநிர்ணய உரிமை” என்பது இதுவரை அங்கீகரிக்கப்படாத நிலையில் அரசியல் தீர்வும் உருவாக்கப்படவில்லை.
2009 இல் போரும் இல்லாதொழிக்கப்பட்ட பின்னணயில், 2012 ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா சமா்ப்பித்த பிரேரணை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது முதல், இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பரிந்துரைகள் எதனையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றவில்லை.
அவ்வப்போது நிராகரித்தும் உள்ளது. இந்த ஆண்டு அநுர அரசாங்கமும் உடனடியாகவே நிராகரித்துள்ளது.
ஆனாலும், அரசுக்கு அரசு என்ற அணுகுமுறையின் மூலம், தொடர்ந்தும் “இலங்கை அரசு” என்ற கட்டமைப்புக்கு ஏற்ற மாதிரியான அதாவது “இலங்கை ஒற்றையாட்சி” அரசு என்ற கட்டமைப்பை பாதுகாப்பதற்கு ஏற்ற விசாரணை பொறிமுறைகளையே மனித உரிமைச் சபையும் தீர்மானமாக நிறைவேற்றி வருகின்றது.
பாதிக்கப்பட்ட தமிழர்களின் நலன்கள் குறிப்பாக இன அழிப்புக்கான சா்வதேச நீதி மற்றும் அரசியல் தீர்வுகள் பற்றிய எந்தவொரு விதப்புரைகளும் இன்றி, வெறுமனே 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற மென்போக்கான பரிந்துரைகளோடு தீர்மானம் அமைகின்றன.
2009 இற்குப் பின்னரான சூழலில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் ஒருமித்த குரலில் அரசியல் தீர்வு பற்றிய நிலைப்பாடுகள் மற்றும் இன அழிப்பு – போர்க் குற்றங்கள் பற்றிய சர்வதேச நீதி விசாரணைக்கான பொறிமுறைகள் ஆகியவற்றில் தெளிவற்ற தன்மை தொடருவதே இதன்குப் பிரதான காரண – காரியம் என்பது பகிரங்கமான உண்மை.
தமிழ்த்தேசியக் கட்சிகளிடையேயான குழப்பங்கள் – குத்துவெட்டுகளினால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று ஜெனீவாவுக்கும் நன்கு தெரியும்.
ஆனாலும் இந்தோ – பசுபிக் பிராந்திய இராணுவப் பாதுகாப்புச் சிந்தனையோடு சிங்கள அரசியல் தலைவர்களுக்கு சாதகமாக அதாவது , அமெரிக்க – இந்திய அரசுக்குகளுக்கு “இலங்கை அரசு” என்ற கட்டமைப்பு அவசியம் என்ற அடிப்படையில் தீா்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
இத் தீர்மானங்களை பதவியில் உள்ள அரசாங்கம் நிராகரித்த பின்னர் கூட, கண்டிக்கும் அறிக்கைகள் ஜெனீவா மனித உரிமைச் சபையினால் ஒருபோதும் வெளியிடப்படுவதில்லை.
மாறாக எழுபது ஆண்டு கால வரலாறுள்ள தேசிய இனச் சிக்கலுக்கான தீர்வை, ஒரு நாளில் நடந்து முடிந்த உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கான பொறுப்புக் கூறலோடு சமப்படுத்தி ஜெனீவா அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.
ஆணையாளரின் இறுதி அறிக்கையில் கூட A/HRC/60/21) பக்கங்கள் 8 தொடக்கம் 11 வரை இந்த மூன்று பிரிவுகளாக உண்மைத் தேடல் பொறிமுறை (A. Truth-seeking mechanism) அடையாளச் சின்னங்களாகிவிட்ட குற்றங்களுக்கான உள்நாட்டு நீதி (B. Emblematic cases) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கான பொறுப்புக்கூறல் (C. Accountability for Easter Sunday attacks) என்று வகைப்படுத்தியிருப்பதைப் பார்க்கும் போது இது உறுதிப்படுத்தப்படுகிறது.
கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும், ஒட்டுமொத்த இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற தொனியே காணப்பட்டன.
மனித உரிமை என்பதற்குள் வைத்து அரைகுறையான பதின்மூன்றாம் திருத்தத்தைப் பற்றிய தமது அக்கறையை ஜெனீவா கடந்த 2012 இல் இருந்து வெளிக்காட்டி வரும் நிலையில், அந்த 13 தான் நிலைமாறுகால நீதி என 2015 இல் இருந்து சர்வதேசம் தமிழர்களுக்கு பாடமும் கற்பித்து வருகிறது.
இந்தியாவுக்கும் மேற்குலகத்துக்கும் ஆட்சி மாற்றமே நிலைமாறுகால நீதியாகத் தென்படுகிறது.
ஆனாலும், மேற்குலகத்துக்கும் இந்தியாவுக்கும் இடையே இதிலே சிறிய வித்தியாசமும் உள்ளது.
அது என்னவென்றால், அடையாளச் சின்ன நீதி உள்ளக விசாரணைகளில் தவறினால் அதை இட்டுநிரப்பும் விதத்தில் வெளியக நீதியைப்பயன்படுத்தலாம் என்ற தொனியை மேற்குலகம் ஓர் அழுத்தத்துக்காகவேனும் வெளிப்படுத்தும்.
ஆனால், இந்தியா ஒருபோதும் எந்தவித வெளியக விசாரணைக்கும் அங்கீகாரம் வழங்காது.
இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக தற்போது ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் பிரித்தானியாவால் வரைபாக்கம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2025 ஆம் ஆண்டு தீர்மானம் வெளிப்படுத்தியுள்ளது.
இதனால், ஒருசில அடையாளச் சின்னமான குற்றங்களை (Emblematic Cases) மட்டும் இலங்கை தனது உள்ளகப் பொறிமுறை ஊடாக சர்வதேச தொழிநுட்ப உதவியைப் பெற்று மேற்கொள்ள வேண்டும் என்று இந்தச் சர்வதேச அரசியல் எமக்குத் தனது தெரிவையே இறுதித் தெரிவாக முன்வைத்து வருகிறது.
இதுதான் கானல் நீதி. இந்தக் கானல் நீதியை மறுத்து உண்மையான சர்வதேச நீதியைத் தான் ஈழத்தமிழர்கள் தாயகத்திலும், புலம்பெயர் சூழலிலும் கோருகின்றார்கள்.
சர்வதேச நீதிப் பொறிமுறை என்று ஈழத்தமிழர்கள் எதைச் சொல்கிறார்கள் என்பதை தற்போது தான், கட்சி அரசியலைக் கடந்து ஓரளவுக்கு வரையறை ரீதியாக வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். இதற்கு சிறப்பான எடுத்துக்காட்டாக, திருகோணமலை ஆயர், மன்னார் ஆயர், யாழ். மாவட்ட குருமுதல்வர், சைவ ஆதீனங்கள் மட்டுமன்றி 56 குடிசார் அரசியற் செயற்பாட்டாளர்கள் நேரடியாகக் கையெழுத்திட்டு முன்வைத்த கோரிக்கை முன்னுதாரணம் ஆகியுள்ளது.
அதைப்போல 80 புலம்பெயர் அமைப்புகள் ஒத்திசைவாக, தாயகத்தில் வெளிவந்த பல தரப்புகளின் கோரிக்கைகளையும் சீர்தூக்கி ஆராய்ந்து வெளியிட்டுள்ள புலம் பெயர் கூட்டு அழைப்பு (Tamil Diaspora Joint Call) என்ற வேலைத் திட்டமும் முதன்முதலாக 2025 ஆம் ஆண்டில் வரையறை செய்துள்ளன.
அதிலே, அரசு என்ற பொறிமுறைக் கட்டமைப்பின் ஊடான இன அழிப்புக்கு சர்வதேச நீதி விசாரணை கோருகின்ற தகுதியை ஈழத்தமிழ்ச் சமூகம் எவ்விதமான சந்தேகங்களுக்கும் இடமின்றிப் பெற்றுள்ளது என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், ஜெனீவா மனித உரிமைச் சபை அதனை கவனத்தில் எடுக்காமல் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் காணப்படும் உள்ளக முரண்பாடுகள், அரசியல் கருத்து வேறுபாடுகள் என்பதை சாதமாக்கி புவிசார் அரசியல் நலன்களுக்கு அறிக்கையை தயாரித்திருக்கிறது.
குறிப்பாக, கஜேந்திரகுமாரை மையப்படுத்திய தமிழ்த் தேசியப் பேரவை இந்த ஆண்டு அனுப்பிய கடிதத்தில், “இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை” “இலங்கை அரச பொறுப்புக் கூறல்” என்ற இரண்டு பிரதான விடயங்கள் பற்றி துணிவோடு தெளிவாக வலியுறுத்தத் தவறியுள்ளது.
ஆனால், தமிழரசுக் கட்சி அனுப்பிய கடிதத்தில் இந்த விடயங்கள் ஓரளவு உண்டு. ஆகவே, இலங்கை ஒற்றையாட்சி அரசின் நாடாளுமன்ற அங்கீகாரம் பெற்ற கட்சிகளின் குழப்பங்களை, ஜெனீவா தமக்குச் சாதகமாக்கியுள்ளது எனலாம்.
இப் பின்னணியில் தமிழ்த் தேசியக் கட்சிகளைக் கடந்து, அரசு ஒன்றின் ஒத்துழைப்புடன், சர்வதேச நீதிமன்றத்தை (International Court of Justice -ICJ) நோக்கியே தமிழ்த்தரப்புச் செல்ல வேண்டும். பலமுள்ள பொது அமைப்பாக ஒருமித்த குரலில் செயற்பட்டு தமிழ்த்தரப்பு இந்த அணுகுமுறையை கையாள வேண்டும்.
ஆனால், சிறிய அரசு ஒன்றின் உதவி கூட இல்லாமல் சர்வதேச நீதிமன்றத்தில் இன அழிப்புக்கான சர்வதேச நீதியை கோர முடியாது. அதற்குப் பெரும் தொகைப் பணமும் தேவை.
ஆகவே, கட்சி அரசியலைக் கடந்துதான் இது பற்றிச் சிந்திக்க வேண்டும். ஏனெனில் அமெரிக்க – பிரித்தானிய – இந்திய அரசுகள் என்ற வல்லாதிக்க அரசுகளைத் தவிர, தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு உலகில் உள்ள வேறு சிறிய அரசுகள் கண்களுக்குத் தெரிவதில்லை.
அதேநேரம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court -ICC) இன அழிப்புக்கு சர்வதேச நீதியை கோர முடியாது. ஏனெனில், 2002 ஆம் ஆண்டு தான் அது உருவாக்கப்பட்டது. ஆகவே, அந்த ஆண்டில் இருந்துதான் எந்தவொரு இன அழிப்பு விசாரணைகளையும் அந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும்.
அத்துடன் ரோம் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திடவுமில்லை. இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்று ஜெனீவா வலியுறுத்தி வருகின்றது.
அதன் பிரகாரம் இலங்கை கைச்சாத்திட்டாலும், இலங்கை கைச்சாத்திட்ட அந்த ஆண்டில் இருந்துதான் விசாரணைகள் ஏற்கப்படும். இது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பொது விதி.
ஆகவே, 1950 களில் ஆரம்பித்த இன அழிப்பு என்பதற்குரிய சா்வதேச நீதியை, ஈழத்தமிழர்கள் சா்வசே குற்றவியல் நீதிமன்றத்தில் கோர முடியாது.
எனவே, பல சவால்களைக் கடந்து சர்வதேச நீதிமன்றத்தை நோக்கிச் செல்வதற்கான ஏற்பாடுகளை கட்சி அரசியலைக் கடந்து தமிழ்த்தரப்பு மேற்கொள்ள வேண்டிய காலமிது .