மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஜனாதிபதி அஞ்சுகிறார். சுமந்திரன் விளக்கம்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஜனாதிபதி அஞ்சுகிறார். சுமந்திரன் விளக்கம்
மாகாண சபைத் தேர்தல்கள் ஏன் நடத்தப்படவில்லை?

நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி பாரிய வெற்றியை பெற்றுள்ளது. அத்துடன் தென் பகுதியிலும் எதிர்க்கட்சிகள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளதால், அநுர அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அஞ்சுவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை ஆலையடிவேம்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு விளக்களித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக 50 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவான ஒரே ஒரு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாத்திரமே என்றும் சுட்டிக்காட்டிய அவர், மாகாண சபைத் தேர்தல்களை எதிர்கொள்ள ஜனாதிபதி வெட்கமடைவதாகவும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைத்து விட்டது என்பதற்காக அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களிலும் அவ்வாறு எதிர்பார்க்க முடியாது எனவும் சுமந்திரன் கூறினார். மக்கள் சிந்தனைகளில் மாற்றம் வரும் எனவும் சொன்னார்.

நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் மூலம், மக்கள் நிலமையை புரிந்திருக்கிறார்கள். வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாத பின்னணியில் அடுத்து வரவுள்ள தேர்தல்களில் அரசாங்கம் வெற்றியை எதிர்பார்க்க முடியாது எனவும் கூறிய அவர், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தேர்தலை பிற்போட முடியாது எனவும் வேறு காரணங்களைக் கூறி தேர்தலை மேலும் பிற்போட அனுமதிக்க இயலாது என்றும் சுமந்திரன் மேலும் விளக்கமளித்தார்.

Share This