நேபாளத்தில் நடந்தது என்ன? சமூக ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்!

ஊரடங்குச் சட்டங்களுக்கு மத்தியிலும் நேபாளத்தில் இடம்பெற்ற போராட்டங்களின் பின்னர் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் கட்டுப்பாடுகளை நீக்கியது பற்றிய அறிவிப்பு திருப்திகரமாக இல்லை என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் அயல் நாடான நேபாளத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெறும் மக்கள் போராட்டம் நேபாளத்தின் கடந்தகால அரசியல் முறைமைகளை ஞாபகப்படுத்தியுள்ளன. தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாத சமூக ஊடகத் தளங்களுக்கு தடைவிதிக்குமாறு நேபாள உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
நேபாள அரசாங்கம் ஆகஸ்ட் 28-ஆம் தேதி முதல் ஏழு நாட்கள் பதிவுக்கு விண்ணப்பிக்க சமூக ஊடகத் தளங்களுக்கு அவகாசம் வழங்கியது. 2023 ஆம் ஆண்டு இச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
இதன் காரணமாக நேபாளத்தின் காத்மாண்டு, போகாரா, புட்வால், பைரஹாவா பரத்பூர், இட்டாஹரி மற்றும் டமாக் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இப்போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. நேபாள ஜென் சி (Gen Z) எனப்படும் தலைமுறையினர் தொடர் போராட்டங்ளை ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
கடந்த மாதம் பட்டியலிடப்பட்ட ஐந்து தளங்கள் மற்றும் விண்ணப்பித்த இரண்டு தளங்கள் தவிர மொத்தம் 26 தளங்கள் மீது நேபாள அரசு தடை உத்தரவை பிறப்பித்தது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத, மெட்டாவின் (Meta) வாட்ஸ்-அப் (Whatsapp), முகநூல் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் ஆல்ஃபபெட் (Alphapet), எக்ஸ் (X), ரெட்டிட் (Redit), லின்க்ட் இன் (Linkdin) உள்ளிட்ட உலகளாவிய, பெரும்பாலும் அமெரிக்க தளங்கள் தடை செய்யப்பட்டன.
டிக்ரொக் (TikTok), வைபர் (Viber), விட்க் (Witk), நிம்பஸ் (Nimbuzz) மற்றும் போப்போ லைவ் (Poppo Live) ஆகிய தளங்கள் முன்னரே பட்டியலிடப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த முடிவு ஆட்சேபனைக்குரியது என்றும், சமூக ஊடகங்களை முடக்குவது நாட்டை சீர்குலைக்கும் என்றும் நேபாளத்தின் பிரதான எதிர்க்கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. அக் கட்சி எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளது.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் படுகொலை செய்யப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 347 பேர் வரை காயமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து சமூக ஊடகத் தளங்கள் மீதான தடையை நேபாள அரசு நீக்கியுள்ளது. ஆனாலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடரும் என்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பலரும் ஊழலுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர். டிக்ரொக்கில் “வாரிசு குழந்தை” என்று பொருள்படும் “நெப்போ பேபி” (Neppo baby), “நெப்போ கிட்” (Neppo kid) என்ற வார்த்தைகள் ட்ரண்டில் உள்ளன. அதில் அரசியல்வாதிகளின் குழந்தைகளின் சொகுசு வாழ்க்கை குறித்த புகைப்படம் – காணொளிகள் பதிவிடப்பட்டு வருகின்றது.
இப் போராட்டங்கள் நேபாள அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், ஊழல் மோசடி மற்றும் மக்களின் விருப்பங்களுக்கு மாறான அரசியல் நடைமுறைசெய்திகள் எதிர்காலத்தில் சாத்தியப்படாது என்ற செய்தியை கொடுத்துள்ளன.
சர்வதேச ஊடகங்கள் இதற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன. நேபாளத்தில் இன்று புாதனகிழமை அமைதி நிலவுவதாக அரசு அறிவித்துள்ளது. ஆனாலும் மக்கள் எந்தவெளையிலும் வீதியில் இறங்கும் சூழல் இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.