விபத்தில் மாணவர்கள் உட்பட மூவர் பலி- குளியாப்பிட்டியில் சம்பவம்

வடமேல் மாகாணம் குருணாகல் மாவட்டம் குளியாப்பிட்டியில் உள்ள பலப்பிட்டி பிரதேசத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
பலப்பிட்டி பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து நேர்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகன சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்ததாகவும், காயமடைந்த மாணவர்களில் சிலரின் கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறிய பொலிஸார், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
பாடசாலை வாகனம் கடுமையாகச் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.