புதிய வகிபாகத்தில் அமெரிக்க – இந்திய உறவு, சீனாவை விடவும், அமெரிக்க உறவு மேலானது என்ற போக்கில் அநுர

மீண்டும் அமெரிக்க – இந்திய உறவு மேலோங்கி வருகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, நரேந்திர மோடி அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்தியிருந்தார். இக் காலப்பகுதியில்தான் அமெரிக்க – இந்திய பாதுகாப்பு ஒப்பந்தங்களும் வெவ்வேறு வடிவங்களில் செய்யப்பட்டிருந்தன.
இப் பின்னணியில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20 ஆம் திகதி பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், மோடியுடன் மீண்டும் உறவை புதுப்பித்திருக்கிறார். உலக அளவில் அமெரிக்கா விதித்துள்ள வரிகள், இந்தியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் இந்தியாவுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி குறைந்தளவானதுதான்.
இந்தியா மாற்றுத் திட்டங்களை மேற்கொள்வதுடன் அமெரிக்க உற்பத்திப் பொருட்களுக்கும் வரியை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. ஆனாலும் அமெரிக்க இந்திய உறவு ட்ரம்ப் – மோடி என்ற தனிப்பட்ட முறையிலான கூட்டிணைப்பு ஊடாக புதிய வகிபாகம் ஒன்றை உருவாக்கும் சந்தர்ப்பங்கள் உண்டு.
அமெரிக்க நாடாளுமன்றக் குழு உறுப்பினர்
இந்தியா அமெரிக்காவுடன் உறவை வலுப்படுத்தி வருவதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவு குழு மூத்த உறுப்பினரான பிராட் சொர்மன் (Brad Sherman) தெரிவித்துள்ளார்.
அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த உறவு பற்றி விபரித்துள்ளார்.
‘பிரதமர் மோடி இந்தியாவின் முகம்’ என்று வர்ணித்துள்ள பிராட் சொர்மன், மோடியின் ஆட்சியில் இந்தியா குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை கண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இப் பின்னணியில் இராணுவ உளவுப் பகிர்வு மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட பசுபிக் பகுதியை சுதந்திரமாகவும் அமைதியாகவும் வைத்திருக்க முயற்சி செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலம், மிகப்பெரிய கூட்டு நடவடிக்கைகள் மற்றும் பயிற்சிகளுடன் பாதுகாப்பு முறைமைகளில் அமெரிக்க – இந்திய உறவு வலுவாக இருப்பது தெளிவாக தெரிகிறது.
அதேநேரம் ட்ரம்ப் விதித்த வரிகளினால் 500 பில்லியன் டொலர் சந்தையை சீனா இழக்கும்போது, மலிவான விலைகளில் தனது உற்பத்திகளை இந்திய சந்தைகளில் சீனா குவிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக’ இந்திய உற்பத்தித் துறைத் தலைவர் அஜய் சஹாய் சுட்டிக்காட்டியுள்ளார்.
மலிவான சீன தயாரிப்புகள் இந்திய சந்தையில் குவிக்கப்பட்டால், அது இந்திய உற்பத்தியாளர்களுக்கு பெரிய பாதிப்பாக அமையும் என்றும், இந்திய நிறுவனங்கள் வலிந்து மலிவாக்கப்பட்ட சீன பொருட்களுடன் போட்டியிட முடியாது என்றும் என்றும் அஜய் சஹாய் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி
இந்திய உற்பத்தியாளர்களின் நலன்களுக்காக அமெரிக்க வர்த்தகத் துறையுடன் எவ்வாறு கைகோர்ப்பது என்பது குறித்து இந்தியா கவனம் செலுத்தும் என நம்புவதாகவும் அவர் கூறுகிறார்.
அதேவேளை அரசியல் பொருளாதார ரீதியில் அமெரிக்க இந்திய உறவுக்கும் புதிய உடன்பாடுகளுக்கும் ஏற்ப அணுகுமுறைகளை வகுக்கவுள்ளதாக புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகமும் கூறியிருக்கிறது.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கடந்த 21 ஆம் திகதி திங்கட்கிழமை புதுடில்லிக்குச் சென்று பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய பாதுகாப்பு துறையின் உயர் அதிகாரிகள் இந்திய பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்ட பலரைச் சந்தித்திருக்கிறார்.
மோடி – ட்ரம்ப் ஆகிய இருவரும் கடந்த பெப்ரவரி மாதம் வோஷிங்டன் நகரில் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது, 2030 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்க – இந்திய வர்த்தகத்தை 500 பில்லியன் டொலர்களாக உயர்த்துவதற்குரிய திட்டங்களை வகுத்திருந்ததாக நியுயோர்க் ரைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் பின்னர் புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பொன்றில் அமெரிக்க – இந்திய உறவின் முக்கியம் தொடர்பாக விபரிக்கப்பட்டுள்ளது,
குறிப்பாக பொருளாதார ஒத்துழைப்பு இந்தோ – பசுபிக் பாதுகாப்பு போன்ற விடயங்களில் அமெரிக்க – இந்திய செயற்பாடுகள் பற்றிய நம்பிக்கைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
சீனாவின் செல்வாக்கு
அதாவது குறித்த விடயங்களில் அமெரிக்க இந்தியக் கூட்டுச் செயற்பாட்டின் அவசியத்தை ஜெய்சங்கரும் வலியுறுத்துவதாக பிபிசி உலக செய்திச் சேவை கூறுகிறது.
இந்திய அதிகாரிகளுடன் இந்தோ – பசிபிக் பிராந்திய பாதுகாப்பு, சீனாவின் செல்வாக்கு மற்றும் உலகளாவிய வர்த்தக பிரச்சினைகள் தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் குவாட் இராணுவக் கூட்டணியில் இணைந்து எதிர்கொள்ளும் என்று சென்ற 22 ஆம் திகதி ஜெய்ப்பூரில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் வான்ஸ் உரை நிகழ்த்தியபோது பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.
அதாவது இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு மற்றும் சீன இராணுவ ஆதிக்கங்களை தடுக்க அமெரிக்க – இந்திய கூட்டுக்கு அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளும் ஒத்துழைக்கும் என்றும் அவர் விபரித்திருக்கிறார். குவாட் இராணுவ கூட்டு அணியில் இந்த நாடுகள் பிரதான அங்கம் வகிக்கின்றன.
இப் பின்னணியில் அமெரிக்கத் துணை ஜனாதிபதி வான்ஸ் நிகழ்த்திய உரை அமெரிக்க இந்திய ஊடகங்களில் முக்கியம் பெறுகின்றன. இச் சூழலில்தான் அமெரிக்க உறவின் முக்கியத்துவம் பற்றி இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் கருத்து வெளியிட்டிருக்கிறார்.
ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதற்கு முன்னர் அதாவது எதிர்க்கட்சியாக இருந்தபோது அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்க – இந்திய நாடுகளுக்குப் பயணம் செய்தமை பற்றியும், இந்த இரு நாடுகளின் உறவுகள் இலங்கைக்கு முக்கியமானது என்பது தொடர்பாகவும் விஜத ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமரிக்க பொருளாதார குழுவுடன் சந்திப்பு
அமெரிக்க விரியின் பாதிப்புகள் மற்றும் இலங்கை பொருளாதாரத்தை முன்னேற்றுவது தொடர்பான அநுரகுமாரவின் ஆலோசனையுடன் இலங்கைப் பொருளாதார இராஜதந்திர குழு ஒன்று சென்ற 22 ஆம் திகதி வோசிங்டனில் பேச்சு நடத்தியுள்ளது.
ஆசியப் பிராந்தியத்தின் தெற்கு – மத்திய ஆசிய பகுதிகளுக்குப் பொறுப்பாகச் செயற்படும் அமெரிக்க வர்த்தகச் செயற்பாட்டுப் பிரிவு அலுவலகத்த்தின் (Office of the United States Trade Representative -USTR) தலைமைச் பிரதிநிதி பிரெண்டன் லின்ச் (Brendan Lynch) உள்ளிட்ட அமெரிக்க முதலிட்டுச் சபை உறுப்பினர்கள் பலருடன் இலங்கைப் பொருளாதார இராஜதந்திரக் குழு பேச்சு நடத்தியிருக்கிறது.
இலங்கைக்குப் பாதகம் இல்லாத முறையில் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்வதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்திய வர்த்தகச் சபை உறுப்பினர்களையும் இலகைப் பொருளாதார இராஜதந்திர குழு சந்திக்கவுள்ளது. விரைவில் கொழும்பில் சந்தப்புகள் இடம்பெறவுள்ளன.
அதேவேளை அமெரிக்க – இந்திய உறவுகள் பற்றியும் சீனாவோடு பொருளாதார உறவைப் பேணுவது குறித்தும் வெளியுறவு இலங்கை அமைச்சு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
குறிப்பாக அமெரிக்க – இந்திய உறவு தொடர்பாகவும் அந்த உறவுடன் இலங்கை சேர்ந்து பயணிக்க வேண்டிய அவசியம் பற்றியும் ஆராயப்பட்டு வருவதாகக் கொழும்பில் தகவல்கள் கசிந்துள்ளன. வெளியுறவு அமைச்சர் விஜத ஹேரத் தலைமையில் இலங்கைப் பொருளாதார இராஜதந்திரிகள் (Economic Diplomats) இது தொடர்பான

தற்போது குழப்பமடைந்திருக்கும் சர்வதேச ஒழுங்கு முறைக்குள் இராணுவ மற்றும் பொருளாதார விஸ்தரிப்பு விவகாரங்களில் புதிய உருவெடுக்கும் அமெரிக்க – இந்திய உறவுக்குள், தங்கி வாழும் புதிய அரசியல் அணுகுமுறை ஒன்றை அநுர வகுக்கிறார் என்பது சமீபத்திய தகவல்.
காஷ்மீரில் கடந்த வாரம் 27 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் இந்தியா – பாகிஸ்தான் இராஜதந்திர உறவு முறிவு மற்றும் சமீபத்திய புவிசார் அரசியல் சூழல் இலங்கைக்குச் சாதகமான ஒன்றே.

ஆனால் புதிய அரசியல் கோணத்தில் ஈழத்தமிழர்களின் ‘அரசியல் விடுதலை’ என்பதன் நியாயப்பாடுகள் அத்தனையும் தேசிய மக்கள் சக்திக்குள் கரைக்கப்படுகின்றன.