உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரம்- அரச சாட்சியாக மாறுவாரா பிள்ளையான்?

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரம்- அரச சாட்சியாக மாறுவாரா பிள்ளையான்?

பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை மட்டக்களப்புச் சிறைச்சாலைக்குச் சென்று சந்திக்க முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்பியபோதும், அரசாங்கம் அதற்குச் சம்திக்கவில்லை.

ஆனாலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி உதய கம்மன்பிலவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக கொழும்பில் பல்வேறு தகவல்கள் கசிந்துள்ளன.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனாலும் அவர் மீது கடத்தல், கொலைகள் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் உள்ள நிலையில், உயிரத்த ஞாயிறுத் தாக்குதல் விவகாரத்தில் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

இந்த நிலையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் பிள்ளையானை அரச சாட்சியாக மடை மாற்றி தாக்குதலுக்குப் பின்னால் உள்ள பிரதான சக்திகளை காப்பாற்றும் நோக்கம் உள்ளதாக கொழும்பில் தகவல்கள் கசிந்துள்ளன.

அரச சாட்சியாக மாற்றுவது தொடர்பாகவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிள்ளையானுடன் பேசியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

ஆனாலும் விசாரணைகள் உரிய முறையில் நடத்தப்படும் என அரசாங்கம் கூறுகின்றது. கொழும்பு கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் இல்லமும் பிள்ளையான் மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்படுமா என்பது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளது.

ஆனாலும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைப்பதாகவும் பேராயர் இல்லம் கூறியிருக்கிறது. அதேவேளை, பிள்ளையான் கைது விவகாரம் தொடர்பாக பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும் அமைதியாகவுள்ளன.

மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலும் கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கத்திலும் பிள்ளையான் பிரதி அமைச்சராகவும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழத் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.

2007 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் பதவி வகித்திருந்த பிள்ளையான் சமீபத்தில் கருணா எனப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுடன் கிழக்கு மாகாண அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்திருந்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம், கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத் உட்பட பல்வேறு கொலைச் சம்பவங்கள் தொடர்பாக அமரர் சம்பந்தன் நாடாளுமன்த்தில் 2008 ஆம் ஆண்டு கூறியதுடன் பிள்ளையானைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்..

2015 இல் மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் பிள்ளையான் கைது செய்யப்பட்டிருந்தாலும் 2020 இல் கோட்டாபய ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் விடுதலை செய்திருந்தார்.

இப் பின்னணியில் தற்போது அநுரவின் அரசாங்கத்தில் வேறொரு அரசியல் நோக்கில் பிள்ளையான் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This