தென்கொரிய ஜனாதிபதியின் இராணுவச் சட்டமும் ரணிலும்

தென்கொரிய ஜனாதிபதியின் இராணுவச் சட்டமும் ரணிலும்

ரசிய – உக்ரெயன் போர், இஸ்ரேல் – காசா போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் உலக அரசியல் ஒழுங்குகளும் குழப்பியுள்ளன. தெற்காசிய நாடுகள் உள்ளிட்ட வளர்முக மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் தென்கொரிய ஜனாதிபதி இராணுவச் சட்டத்தை உள்ளுரில் பிறப்பித்திருந்தார்.
இப் பின்னணியில் இராணுவச் சட்டங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் என்ற போர்வையில் உள்ளுரில் வாழும் ஏனைய தேசிய இனங்களை அடக்கி வரும் இலங்கை போன்ற நாடுகள் தென்கொரிய இராணுவச் சட்டத்திற்கு எதிராகக் கருத்திட்டிருக்கின்றன.

குறிப்பாக இலங்கைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமங்க இராணுவச் சட்டம் மீளப் பெறப்பட்டதை வரவேற்றிருக்கிறார். 2009 போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான கடந்த 15 வருடங்களிலும் வடக்குக் கிழக்கில் இராணுவச் செயற்பாட்டுக்கு முக்கியமளித்து வரும் இலங்கை அரச கட்டமைப்பின் முன்னாள் ஆட்சியாளரான ரணில் பாரட்டியுள்ளதன் பின்னணியிலும் உலக அரசியல் பொதிந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

கொரியா இரண்டு நாடாக பிரிந்ததிலிருந்து தென்கொரியா அமெரிக்கா, பிரித்தானிய உள்ளிட்ட நாடுகளின் கட்டுப்பாட்டிலும், வடகொரியா, சீனா மற்றும் ரசியா ஆகிய நாடுகளின் நட்புறவுடனும் இருந்து வருகின்றன.

வடகொரியா சொந்த மக்களுக்கு எதிராக தொடர்ச்சியான அடக்குமுறைகளை கையாள்வதாக தென்கொரிய ஊடகங்களினூடாக அறிந்துள்ளோம்.
ஆனால் அவை எந்தளவிற்கு உண்மை என்பதற்கான சான்றுகள் போதுமானவையாகத் தெரியவில்லை.

இவ்வாறிருக்க தற்போது தென்கொரியாவில் அமுல்படுத்தப்பட்ட இராணுவ சட்டத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
உலகளவில் தென்கொரியா பேசு பொருளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் கடந்த செவ்வாய்க்கிழமை (03.12.2024) அந்நாட்டில் அவசரகால இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியதால் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

வடகொரியாவின் கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல்களிலிருந்து தென்கொரியாவை பாதுகாக்கும் நோக்கிலும் உள்நாட்டில் தேச விரோத சக்திகளை ஒழிக்கும் நோக்கிலும் இராணுவ ஆட்சியை அமுல்படுத்தியாக அவர் விளக்கமளித்திருந்தார்.

இதன்பின்னர் இந்நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்பிற்கு எதிரானது என தென் கொரிய அரசியல்வாதிகள் இராணுவச் சட்டப் பிரகடனத்தை விமர்சித்தனர்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலருமே இதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். ” இராணுவ ஆட்சி வேண்டாம் , சர்வாதிகாரத்தை முறியடிக்கவும் போன்ற வாசங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடகொரிய ஆதரவாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறிய போதிலும் அவருக்கு எதிராக கண்டனம் வெளியிடப்பட்டது.

அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளன. அதுமட்டுமின்றி மக்கள் தொடர்ந்து ஜனாதிபதி யூன் சுக் யோல் பதவி விலக வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் மக்கள் பிரதிநிதிகளும் இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்தி வாக்களித்தனர். சட்டத்தைத் திரும்பப் பெற தேசிய சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மொத்தமுள்ள 300 பேரில் 190 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனை தொடர்ந்து தென்கொரிய ஜனாதிபதி அந்த அவசரநிலை இராணுவ சட்டத்தை மீளப்பெறுவதாக அறிவித்தார்.

ஆனாலும் தென்கொரிய ஜனாதிபதியை பதவிநீக்கம் செய்யும் தீர்மானத்தை அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தன.
தென் கொரிய ஜனாதிபதி பதவிநீக்கம் செய்ய நாடாளுமன்றத்தில் 3 இல் இரண்டு பெரும்பான்மை ஆதரவும், குறைந்தபட்சம் 6 அரசியலமைப்பு நீதிமன்ற நீதிபதிகளின் ஆதரவும் தேவைப்படும். யூன் தானாக பதவி விலகாவிட்டால் அவரை பதவி நீக்கம் செய்யப்போவதாக எதிர்க்கட்சி அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

அவ்வாறு தென்கொரிய ஜனாதிபதி பதவி விலகும் பட்சத்தில் அந்நாட்டு பிரதமர் ஜனாதிபதி கடமைகளை செய்ய வேண்டும் என்பது அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய சபையின் நடவடிக்கையை பாராட்டும் ரணில்

இதேவேளை, இராணுவச் சட்ட ஆட்சியை எதிர்ப்பதற்காக, கொரிய குடியரசின் தேசிய சபை எடுத்த துரிதமான மற்றும் ஒன்றிணைந்த நடவடிக்கையை பாராட்ட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.

தென்கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோலின் இராணுவச் சட்டப் பிரகடனம் கொரியக் குடியரசின் ஜனநாயக அமைப்பை அச்சுறுத்தியுள்ளதாக கூறிய அவர் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மற்றும் நிர்வாகத்தை ஆதரிப்பவர்களின் ஒற்றுமை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இராணுவச் சட்டங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டங்கள் என்ற போர்வையில் உள்ளுரில் வாழும் ஏனைய தேசிய இனங்களை அடக்கி வரும் சில தெற்காசிய நாடுகள் தென்கொரிய இராணுவச் சட்டங்கள் தளர்தப்பட்டதை வரவேற்றிருக்கின்றமை வேடிக்கை.

இராணுவச் சட்டம்

அவசர காலத்தின் போது இராணுவச் சட்டம் அமுல்படுத்தப்படும். இது தற்காலிகமானதாக காணப்படும்.
அதாவது, மக்களால் தேர்தேடுக்கப்பட்ட ஆட்சியாளர்களால் நிர்வாகத்தை கொண்டு செல்ல முடியாத போது இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படும்.
தென் கொரியாவில், அப்போதைய சர்வாதிகாரி பார்க் சுங்-ஹீ ஆட்சிக் கவிழ்ப்பின்போது படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இறுதியாக 1979 ஆம் ஆண்டில் இராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

அதற்குப் பின்னர் தென் கொரியாவில் இராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது இதுவே முதன்முறை.
இராணுவ சட்டத்தை அமுல்படுத்துவதாக வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து தென்கொரியாவின் நாணய மதிப்பு பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.
மேலும் இந்த சர்ச்சை ஜனநாயக நற்பெயருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சை தென் கொரிய ஜனநாயகத்திற்கு மாத்திரமல்லாது பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய சவாலாகும்.
இந்த சட்டத்தின் கீழ், இராணுவத்திற்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் இதன் மூலம் சிவில் உரிமைகள் இடைநிறுத்தப்படலாம்.
அதாவது குடிமக்கள் அவர்களது சட்டப் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை இழக்க நேரிடும்.

இக் காரண – காரிய அடிப்படையில் இலங்கையிலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு பலரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
அதாவது இந்த சட்டம் நாட்டில் இராணுவ மயமாக்கலுக்கான அங்கீகாரத்தை வழங்க கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

இராணுவத்திற்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. அதாவது கைது செய்தல், தேடுதல்களை முன்னெடுத்தல் போன்ற அதிகாரங்கள் இராணுவத்திற்கு கொடுக்கப்படுகின்றது. அந்த சட்டத்திற்கு எதிர்ப்பு வெளியிடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்பதை உணர வேண்டும்.
1979 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு பதிலாக, பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டியதொரு சட்டம் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைவாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றை அமைத்துக்கொள்வதே தமது திட்டம் என்று கூறியுள்ளது. இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கான நடவடிக்கைகளை கடந்த அரசாங்கம் முன்னெடுத்த போதே அதற்கு எதிராக வடக்கு கிழக்கு மக்கள் குரல்கொடுத்தனர்.

பாலகணேஷ் டிலுக்ஷா

Share This