அரசாங்கத்திற்குள் குழப்பம்! உள்ளக முரண்பாடுகள் என்பது அநுரவை கவிழ்க்கும் நோக்கம் கொண்டதல்ல

*தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் சிலரின் தீவிர போக்கு அநுரவுக்கு ஆபத்தாக அமையும்…!
*முடங்கியுள்ள மக்களுக்கான சில திட்டங்கள்…!
*பிரதமர் ஹரிணியை மையப்படுத்தி அநுர கையாளும் அமெரிக்க – இந்திய உறவில் சந்தேகம் கொள்ளும் ஜேவிபியின் தேசிய நிறைவேற்றுக் குழுவின் சில உறுப்பினர்கள்…
-அ.நிக்ஸன்-
ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்குள் குழப்பங்கள் என சிங்கள நாளிதழ்கள், சிங்கள சமூக வலைத்தளங்களில் செய்திகள் – தகவல்களைக் காண முடிகிறது. ஆனால் அந்த தகவல்களில் உண்மையில்லை என அரசாங்கம் பல தடவைகள் மறுத்திருக்கிறது. தொடர்ந்தும் மறுதலித்து வருகின்றது.
இலங்கைத்தீவின் தேசியக் கட்சிகள் என அழைக்கப்படும் ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மாறி மாறி ஏறத்தாள 76 வருடங்கள் ஆட்சி அமைத்திருந்தன. 2000 ஆம் ஆண்டின் பின்னர் கடந்த 24 வருடங்களில் இந்த இரண்டு கட்சிகளும் வேறு சிறிய கட்சிகளுடன் இணைந்தும் ஆட்சி அமைத்திருந்தன.
2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ராஜபக்ச குடும்பத்தினர், உருவாக்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும், தேசியக்கட்சி என்ற அந்தஸ்தை பெற்று ஆட்சி அமைத்திருந்தது.
எவ்வாறாயினும் தேசியக் கட்சி என அழைக்கப்படும் இக்கட்சிகளின் மூத்த உறுப்பினர்கள் பலர் கட்சி மாறி அமைச்சுப் பதவிகள் மற்றும் அரச திணைக்களங்களில் பதவிகளை வகித்திருந்தனர்.
76 வருட ஆட்சிகளின் போது அரச ஊழியர்களும் இக் கட்சிகளின் மூத்த அமைச்சர்களினால் நியமிக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு நியமிக்கப்பட்ட அரச ஊழியர்கள் தான் தற்போதும் பதவிகளில் உள்ளனர்.
சிங்கள நாளிதழ் ஒன்றின் கணிப்பின் பிரகாரம், ஏறத்தாள மூன்றில் இரண்டு பகுதி அரச ஊழியர்கள் இந்தத் தேசியக் கட்சிகளின் ஆட்சியின் போது நியமனம் பெற்றவர்கள். ஏனையவர்கள் கட்சி சாராமல் நியமனம் பெற்றவர்கள். அல்லது ஜேவிபி எதிர்க்கட்சியாக இருந்தபோது அமைத்த தொழிற் சங்கங்களின் உறுப்பினர்களாக மாற்றம் பெற்றவர்கள் எனலாம்.
இவ்வாறான பின்னணியுடன் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவிக்கு வந்த அரசாங்கம், ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், உள்ளக முரண்பாடுகளை சந்தித்து வருவது உண்மைதான். இதனை சில மூத்த உறுப்பினர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.
ஆனால், இந்த முரண்பாடு அல்லது குழப்பம் என்பது அநுர அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் நோக்கம் கொண்டதல்ல என்றும் அந்த மூத்த உறுப்பினர்கள் கற்பிதம் செய்கின்றனர்.
ராஜபக்சக்களின் அரசாங்கத்தில் அல்லது மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் எழுந்த உள்ளக முரண்பாடுகள் குத்துவெட்டுகள் போன்றதல்ல அரசாங்கத்துக்குள் எழுந்துள்ள முரண்பாடுகள் எனவும் அவர்கள் செய்தியாளர்கள் சிலரிடம் மிகப் பக்குவமாக விளக்குகிறார்கள்.
அந்த விளக்கத்தில் உண்மை உண்டு. ஏனெனில் 76 வருடங்கள் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்த மேற்படி தேசிய கட்சிகளின் மூத்த தலைவர்கள், அவர்களின் வாரிசுகள், தற்போது அரச கௌரவ பதவிகள் இன்றித் தவிக்கின்றனர்.
அத்துடன் ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்படுகின்றனர். அதாவது, இவர்களின் அரச இராஜ்ஜியம் பூண்டோடு ஒழிக்கப்படும் ஆபத்துகளும் உண்டு.
இதனால் அநுர அரசாங்கத்துக்குள் குழப்பம் – முரண்பாடுகள் என்று இவர்கள் கதை கட்டுகிறார்கள் என்பதை பகிரங்கமாக உணர முடிகிறது.
அரசாங்கத்தின் மீது குறிப்பாக ஜேவிபி மீது மக்களுக்கு தற்போது அதிருப்திகள் இருக்கலாம். ஜேவிபியின் தமிழ் உறுப்பினர்களுக்கு வாக்களித்த மக்களுக்கும் வெறுப்புகள் உண்டு.
13 ஆவது திருத்தச் சட்டத்தைக் கூட அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் என எதிர்பார்க்கவும் முடியாது.
ஆனால், இலங்கையின் பொருளாதார மீட்சி, ஊழல் அதிகார துஷ்பிரயோகம் அற்ற ஆட்சி என்று நோக்கினால், தற்போதைக்கு அநுர அரசாங்கத்தை பதவி கவிழ்க்க சிங்கள மக்களில் அதிகமானோர் விரும்பமாட்டார்கள் என்பது கண்கூடு.
ஆனாலும், மலையகத் தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகள் பலரும் மேற்படி தேசிய கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை விமர்சித்து நல் அபிப்பிராயங்களை குழப்பும் ஆபத்துகள் இல்லாமலில்லை.
அரசாங்கம் உள்ளக ரீதியாக எதிர்நோக்கும் முரண்பாடுகளை மூன்று வகைப்படுத்தலாம்.
1) அரசாங்கத்தின் திட்டங்களை செயல்படுத்த தயங்கும் அரச உயர் அதிகாரிகள். அதாவது, ஊழல் மோசடி அதிகார துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களில் முன்னாள் அதிகாரிகள் கைது செய்யப்படுவதால், தற்போது பதவி உயர்வு பெற்ற உயர் அதிகாரிகள் பலரும் உரிய ஆவணம் இல்லாமல் அபிவிருத்தி திட்ட வரைபுகளில் கையொப்பமிட தயங்குகின்றனர். இதனால் பல திட்டங்கள் காலதாமதம் அடைகின்றன.
சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள சமூக சேவைகள் திணைக்களத்துக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுடன் உரையாடியுள்ளார். சமுர்த்தி நிதி பல குடும்பங்களுக்கு வழங்கப்படாமல் தேங்கியிருப்பதை அறிந்து கொண்டார்.
அதற்கான காரணத்தை அநுர வினவியபோது, உரிய ஆவணங்கள் சரி பார்க்கப்படுவதால் கால தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் விளக்கியுள்ளனர். ஊழல் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு இடமளிக்கக் கூடாது என்ற அரசாங்கக் கொள்கையினால், இவ்வாறு கால தாமதம் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சமுர்த்தி நிதியை வழங்க கால தாமதம் ஏற்பட்டால், மக்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்படைவார்கள் அல்லவா என அநுர பதிலுக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார். ஒரு வகையில் அதிகாரிகளின் விளக்கமும் அநுராவின் கேள்வியும் நியாயமானது தான்.
இதேபோன்றுதான் ஏனைய அரச திணைக்களங்களில் மக்கள் சேவைக்கான ஏற்பாடுகள் கால தாமதமடைந்திருக்குமோ என்று அப்போது அநுர உணர்ந்திருக்கலாம். உண்மை அதுதான் என்கிறார்கள் சில உயர் அதிகாரிகள்
2) பிரதமர் ஹரிணி தொடர்பான உள்ளக முரண்பாடுகள். குறிப்பாக ஹரிணி, அமெரிக்க இந்திய ஆதரவுக் கொள்கை உடையவர். இதனால் அநுரகுமார திஸாநாயக்க, ஹரிணியை நன்கு பயன்படுத்துகிறார்.
இந்தோ – பசுபிக் விவகாரம் உள்ளிட்ட புவிசார் அரசியல் போட்டிச் சூழலில் மேற்கு – ஐரோப்பிய நாடுகளுடன் உறவை பேண வேண்டிய அவசியம் உண்டு. இந்தியா ஊடாக இந்த உறவை சமநிலை செய்கிறார் அநுர.
அதாவது, ரசிய – சீன கூட்டுக்குள் இந்தியா இருக்கிறது. அதேநேரம் மேற்கு – ஐரோப்பிய நாடுகளுடன் குறிப்பாக அமெரிக்காவுடன் இந்தியா உறவை பேணுகிறது.
இந்திய அரசின் இந்த இரட்டை வெளியுறவு கொள்கையை, பிரதமர் ஹரிணியை மையப்படுத்தி, அநுர இலங்கையின் பொருளாதார நிலைமைகளை சீர்ப்படுத்தும் உத்திகளை கையாளுகிறார்.
குறிப்பாக ஈழத்தமிழர் விவகாரத்தை ஜெனீவாவில் இருந்து முற்றாக நீக்கம் செய்ய அல்லது போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணை பொறிமுறையை உருவாக்க, இந்தியா ஊடாக மேற்கு – ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு அநுர அரசாங்கத்துக்கு அவசியமாகிறது.
இதன் காரணமாக ஹரிணி மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை அநுர, கன கச்சிதமாக பயன்படுத்துகிறார். ஆனால், அநுரவின் இந்த உத்தியை ஜேவிபியின் அடிப்படைக் கட்டமைப்பு அதாவது, ஜேவிபியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பலர் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் ஹரிணி போன்ற உறுப்பினர்கள் மீது சந்தேகப்படுகின்றனர்.-
3) அரசாங்க செயற்பாடுகளில் பாரிய அளவு மாற்றங்கள் ஏற்படாமையினால், ஜேவிபியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் அதாவது, அரசாங்கத்தில் எந்தவொரு பதவியிலும் அங்கம் வகிக்காமல் ஜேவிபியின் அடிப்படைக் கொள்கையை மாத்திரம் வடிவமைத்து வரும் உறுப்பினர்கள் மனதுக்குள் முணுமுணுக்க ஆரம்பித்துவிட்டனர்.
தேர்தல் பிரச்சாரங்களில் வாக்குறுதி வழங்கியதன் பிரகாரம், உடனடியாக அநுரகுமார திஸாநாயக்க செயல்படவில்லை என அவர்கள் உள்ளக ரீதியாக குற்றம் சுமத்த ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் “இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற கட்டமைப்பும் அதன் யாப்பும் சட்டங்களும் மற்றும் புவிசார் அரசியல் பொருளாதார போட்டிச் சூழலும் இதற்கு இடம் கொடுக்காது என்ற அரசியல் தன்மை (Nature of Politics) பற்றி அநுரவினால் அவர்களுக்கு விளக்கம் கொடுக்க முடியவில்லை போல் தெரிகிறது.
ஆகவே, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு மேற்கொண்ட விமர்சனங்களை இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் இருந்து கொண்டு தாம் நினைத்த பாட்டுக்கு செம்மைப்படுத்த முடியாது என்ற உண்மையை, அநுர புரிந்து கொண்ட அளவுக்கு, ஜேவிபியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர்கள் சிலரினால் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பதை பிரதான எதிர்க்கட்சிகள் தமக்குச் சாதகமாக பயன்படுத்த முனைகின்றன.
செம்மணி மனித புதைகுழி விவகாரம் தற்போது அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. ஆனால், அது பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல், கொழும்பு துறைமுக வளாகத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி பற்றிய செய்திகளுக்கு அரச ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன.
ஏனெனில், இன அழிப்புக்கான சர்வதேச நீதி என்று புலம்பெயர் தமிழர்களும் வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசியக் கட்சிகள் – சிவில் சமூக அமைப்புகளும் ஜெனீவாவுக்கு கடிதம் எழுதி வரும் பின்னணியில், இலங்கையின் கடந்த கால ஆட்சியாளர்களினால் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் நடந்துள்ளன என்பதை காண்பிக்க அரசாங்கம் திட்டம் வகுக்கிறது.
குறிப்பாக 1987/88 ஆம் ஆண்டுகளில் ஜேவிபி இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை கையில் எடுத்துள்ளார் அநுர.
அதாவது – ஜே.ஆர், பிரேமதாச, சந்திரிகா, மகிந்த, கோட்டாபய, ரணில். ஆகியோரும் மற்றும் சில படை உயர் அதிகாரிகளும் 76 வருட ஆட்சியில் மாறி மாறி அதிகார துஷ்பிரயோகம், ஊழல் மோசடியுடன், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களையும் புரிந்துள்ளனர் என்பதை நிரூபிப்பதே, அநுரவின் சமீபகால உத்தியாக மாறியுள்ளது.
இந்த உத்தியின் மூலம் தமக்கு வாக்களித்த மக்களை சமாளிக்க முடியும் என அநுர நம்பக்கூடும். ஆனால், ஈழத்தமிழர்கள் 1949 இல் இருந்து தமக்கு எதிராக இன அழிப்பு கட்டவிழ்த்து விடப்பட்டது என்பதை நிறுவுவதற்கு முற்படுகின்றனர்.
மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்பது வேறு வகையானது எனவும் ஈழத்தமிழ் தரப்பு வியாக்கியானம் செய்கிறது,
இவற்றை மையமாக கொண்டு, அநுர கையாண்டு வரும் அரசியல் காய் நகர்த்தல்களை ஜேவிபியின் தேசிய நிறைவேற்றுக் குழு புரிந்து கொள்ள மறுக்கிறது. இதன் காரணமாக எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்வது போன்று அரசாங்கத்துக்குள் முரண்பாடுகள் எழுந்து ஆட்சி பலவீனமாகும் ஆபத்து ஏற்படலாம்.
இப் பின்புலத்தில், அநுரவுக்கு மூன்று தெரிவுகள் மாத்திரமே உண்டு..
1) அடுத்த மாதம் நிறைவேற்றப்படவுள்ள ஜெனீவா தீர்மானத்தை முற்றாக நிராகரித்து, இலங்கை அரசு என்ற கட்டமைப்பை புனிதப்படுத்தி சிங்கள மக்களின் ஆதரவை பெறுதல்..
2) ஊழல் மோசடி அதிகார துஷ்பிரயோகம் என்ற அடிப்படையில் மாத்திரம் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் சிலரையும் அவருடைய ஆதரவாளர்கள் சிலரையும் கைது செய்தல். (அதற்கு முன்னராக ரணில் கைது செய்யப்பட்டமை என்பது, ஒரு பரீட்சாத்தமாக இருக்கலாம்) அதேநேரம் தற்போது பதவியில் உள்ள உயர் அதிகாரிகள் அச்சமின்றி பணியாற்றக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்குவது..
3) இலங்கையின் மூத்த இராஜதந்திரிகள் மூலம், ஜேவிபியின் தேசிய நிறைவேற்று உறுப்பினர்கள் சிலருக்கு சமகால உலக அரசியல் ஒழுங்கு பற்றி விளக்கம் கொடுப்பது.
ஆனால், இங்கே ஈழத்தமிழர் விவகாரம், மேலும் பல ஆபத்துகளை எதிர்கொள்ளும் என்பது மாத்திரம் தெளிவாகிறது.