அமெரிக்கப் பின்னணியும் அநுர அரசாங்கமும்

அமெரிக்கப் பின்னணியும் அநுர அரசாங்கமும்
The Government of Sri Lanka and the US

சர்வதேச விசாரணைக் கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யும் இரகசிய நகர்வுகள்  கொழும்பில்.

2015 இல் நடந்தது 2025 இல் 

செம்மணி புதைகுழி விவகாரம் தமிழ் இன அழிப்பின் முழுமையான ஆதாரம் என்று தெரிந்தும், தமிழ்த்தேசியக் கட்சிகள் குறிப்பிட்ட ஒரு எல்லைக்கு மேல் சென்று ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூற முடியாது.

2015 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் அரசாங்கத்தில் எவ்வாறு தமிழ்த் தரப்பு ஏமாற்றப்பட்டதோ, அதேபோன்றதொரு அணுகுமுறை பத்து ஆண்டுகளின் பின்னர் மிகத் தெளிவாக தெரிகிறது.

அதுவும் ஒக்ரோபர் மாதம் ஜெனிவா மனித உரிமைச் சபை கூடவுள்ள நிலையிலும், பொறுப்புகூறல் விவகாரத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் முடிவடையும் பின்னணியிலும் இந்த ஏமாற்றத்தை தமிழர் தரப்பு எதிர்கொள்ள உள்ளது.

கூட்டுரிமை அற்ற செயற்பாடுகள் கட்சி அரசியல் நடவடிக்கைகள் இதற்குக்  காரண – காரியம் என்று கூறலாம்.

2015 ஆம் ஆண்டு வட மாகாணசபை தமிழ் இன அழிப்புக்கான சர்வதேச நீதி கோரிய தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது. அதைப் பெருத்த வில்லங்கமான நகர்வாக புவிசார் அரசியலில் ஈடுபட்டிருந்த சர்வதேச தரப்புகள், குறிப்பாக மேற்கு நாடுகளின் தரப்புகள் கணிப்பிட்டன.

ஏனெனில், வெறும் மனித உரிமை மீறல்களாகவும், போர்க்குற்றங்களாகவும், மனிதத்துவத்துக்கெதிரான குற்றங்களாகவும் இலங்கையில் போரில் ஈடுபட்டிருந்த இரு தரப்புகளையும் குற்றங்களிற் சமப்படுத்தி தமது புவிசார் நலன்களுக்கு ஏதுவான ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் தமது நிகழ்ச்சிநிரலுக்கு நேர் முரணான நிலைப்பாட்டை ஈழத் தமிழர் விடுதலை அரசியலில் உயிர்த்தெழச் செய்யும் வலு அந்த வட மாகாணசபைத் தீர்மானத்துக்கு இருந்தது.

தற்போது மீண்டும் 2025 ஆம் ஆண்டு அதையொத்த வகையில் ஈழத்தமிழர் தரப்பு குறிவைக்கப்படுகின்றது.

அப்போது போலவே தற்போதும் இந்த வெளிப்பின்னணியைப் பலரும் அறியாதுள்ளனர்.

இந்தக் குறிவைப்பில் சில ஸ்கண்டிநேவிய நாடுகள் ஆகியவற்றின் ஒரு வலைப்பின்னலாக அந்தந்த நாடுகளின் அரச உதவிகளோடு இயங்கும் சில அமைப்புகள், குறிப்பாக சுவிற்சர்லாந்து நாட்டின் தூதரக அனுசரணையோடு இலங்கையில் தமது நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்திக் கொள்கின்றன.

அரசுகளின் உதவிகளோடு இயங்கும் இந்த அமைப்புகள் அரசசார்பற்ற தன்னார்வ நிறுவனங்கள் என்று தம்மைத் தாமே விளம்பரப்படுத்திக்கொள்ளுவது வழமை. இந்த அமைப்பு அமெரிக்க போன்ற மேற்கு நாடுகளின் புவிசார் அரசியல் தேவைகளுக்காக செயற்படுவதும் வழமை.

ஆகவே இது குறித்த விழிப்புணர்வு தமிழ்த்தரப்பிடம் ஏற்பட வேண்டிய தேவை மீண்டும் எழுந்துள்ளது.

இந்த வகையில், இரண்டு கேள்விகள் இங்கு முக்கியமானவை.

2015 இல் நடந்தது என்ன, 2025 இல் நடக்கப் போவது என்ன என்ற கேள்விகளே அவை.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் 30/1 தீர்மானம் ஒக்ரோபர் மாதம் 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இலங்கையில் 2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னர் அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து நிறைவேற்றிய தீர்மானமாக இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்தத் தீர்மானம் ஒரு புறம் நிறைவேற, மறுபுறம் உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சில அபிவிருத்தித் திட்டங்கள் குறித்துச் செயற்படுவது என்றும், இன்னொரு புறத்தில் அமெரிக்க இராணுவத் தரப்போடு இலங்கை சில முக்கியமான உடன்படிக்கைகளை மேற்கொள்வது என்றும் திரைமறைவிலான உடன்பாடுகளோடு, மங்கள சமரவீரவுடன் சில புலம்பெயர்த் தமிழ்த் தரப்புகளையும் இணைத்து சமாந்தரமான நகர்வுகள் தொடுக்கப்பட்டிருந்தமை பலருக்கு நினைவிருக்கலாம்.

ஆனால், இவற்றை ஆழமாகக் கிரகிக்கும் தன்மை பெருமளவுக்கு தமிழர் தரப்புகளுக்கு அப்போது இருந்திருக்கவில்லை.

ஏதோ மேற்குலகம் ஈழத்தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத்தந்துவிடும் என்ற மாயை பரவலாக தமிழர் தரப்பைப் பல முனைகளிலும் பீடித்திருந்தது.

இன அழிப்புக்கான சர்வதேச நீதியை ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கோரத் தவறியிருந்தமையால், மாகாணசபைகளின் மக்களாணையைப் பயன்படுத்தியாவது அதைச் சாதிக்கலாமா என்பதாக மக்கள் தளத்தில் இயங்கிய அமைப்புகளதும் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் சிலரும் 2015 ஆம் ஆண்டு சிந்தித்திருந்தனர்.

இன அழிப்பு என்ற பிரதான குற்றம் குறித்த சர்வதேச நீதியின் தேவை பற்றி மாகாண சபை உறுப்பினர்களான எம். கே. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், காலஞ்சென்ற அன்ரனி ஜெயநாதன் போன்றோர் தீவிரமாக அப்போது குரல் எழுப்பியும் வந்தனர்.

ஆரம்பத்தில், அவர்களின் குரல் வடமாகாண முதல்வர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரனை பெரிதாக ஈர்த்திருக்கவில்லை.

இருப்பினும் விரைவில் அவரே அந்தத் தீர்மானத்தை முன்னெடுத்து நிறைவேற்றும் நிலை ஏற்பட்டது.

விளைவாக, கொழும்பில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட 2015 ஜனவரிக்கும் ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேறவிருந்த அதே ஆண்டு ஒக்ரோபர் மாதத்திற்கும் இடையில், பெப்ரவரி மாதத்திலேயே விக்னேஸ்வரன் தலைமையில் இன அழிப்புக்கு சர்வதேச நீதிகோரும் தீர்மானம் மாகாணசபையில் ஏகமனதாக நிறைவேறியது.

குறித்த தீர்மானத்தை இறுதிப்படுத்துவதில் அப்போது விக்னேஸ்வரனுக்கு ஆலோசகராகச் செயற்பட்ட நிமலன் கார்த்திகேயன் கனதியான பங்கை ஆற்றியிருந்தார்.

அவ்வாறான ஒரு தீர்மானம் நிறைவேறிவிடக் கூடாது என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஆ. சுமந்திரன் பெரும் போரையே தொடக்கியிருந்தார்.

ஒரு வகையில் சிவாஜிலிங்கத்தின் இடைவிடாத நகர்வுக்கு எதிராக சுமந்திரன் தொடக்கிய போரினால் ஏற்பட்ட எதிர்வினையாகவே விக்னேஸ்வரனும் நிமலனும் இந்தத் தீர்மானத்தைத் தமது கையில் எடுக்கும் நிலை ஏற்பட்டது எனலாம்.

இது உள்ளார்ந்த நிலை. வெளியில் நடந்தது என்ன?

புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சிலரின் அயராத முயற்சியால் இந்தத் தீர்மானம் குறித்த அழுத்தம் வட மாகாண சபைக்குள் பாய்ச்சப்பட்டிருப்பதாக ஐரோப்பாவில் இருந்து இயங்கும் சில ஆழ்நிலைத் (Deep State) தரப்புகள் தகவல்களைத் திரட்டிக் கணிப்பீடுகளை மேற்கொண்டன.

சில ஸ்கண்டிநேவிய நாடுகளில் இருந்து சூழ்ச்சித்தனமாக இயங்கும் ஆழ்நிலைத் தரப்புகளே இவை.

இவற்றுள் சில மேற்கத்தைய தன்னார்வ நிறுவனங்கள், சில பல்கலைக்கழகங்கள், சிலர் வெளிநாட்டு அமைச்சுகள் மற்றும் அபிவிருத்தித் திணைக்களங்களில் கடமை புரிந்தோர். இவர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்த கொழும்புத் தூதரகங்களின் அதிகாரிகளும் உள்ளடங்கியதாக இந்த ஆழ்நிலைத் தரப்பு இயங்கியது.

வட மாகாணசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அப்போது தமிழ் நட்டில் முதலைம்ச்சராக இருந்த மறைந்த செல்வி ஜெயலலிதாவின் உறுதியான நிலைப்பாட்டுக்குப் பலம் சேர்த்தது.

அதற்கும் இரண்டு வருடங்களுக்கு முன்னர், 2013 இல் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலறி கிளின்டன் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டு ஜெயலலிதா அவர்களைச் சந்தித்து கருத்துத் தாக்கம் செலுத்தியிருந்த போதும், 2015 இல் ஈழத்தமிழர் நிலைப்பாட்டுக்கு முரணாக அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது அதை நேரடியாகவே ஜெயலலிதா சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஈழத்தமிழர் சார்பான பலச் சமநிலையை 2015 இல் தமிழக அரசு சரவதேச மட்டத்தில் உயர்த்தியிருந்தது.

விக்னேஸ்வரன் இன அழிப்புத் தீர்மானத்தை 2015 பெப்ரவரியில் கொண்டு வந்திருந்தாலும், அதே ஆண்டு ஒக்டோபரில் ஜெனீவாவில் அமெரிக்கத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதையும் ஆதரித்தார்.

ஆனால், ஜெயலலிதா அம்மையார் அவ்வாறு விக்னேஸ்வரனைப்போல இரட்டைப் பேச்சுப் பேசவில்லை. தெளிவாக, அந்தத் தீர்மானத்தைக் கண்டித்தார் என்பது இங்கு குறிப்பாக நோக்கப்படவேண்டியது

அதேநேரம், சர்வதேச நாணய நிதியத்தோடு வட இந்திய பொருளாதார நிறுவனங்களிற் சிலவற்றையும் இணைத்து பிரதம மந்திரி ரணில் விக்கிரசிங்க வடக்கு மாகாணத்துக்கு பெரும் அபிவிருத்தி திட்டங்கள் என்ற பெயரில் ஈழத்தமிழர்களுக்குக் குந்தகமான சில திட்டங்களை கொண்டு வர முயற்சித்தார்.

அவற்றின் ஆபத்துகளைச் சுட்டிக்காட்டி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உறுதியாக அவற்றை மறுதலித்திருந்தார்.

இதனால் ஆழ்நிலைத் தரப்புகளின் வில்லங்கம் இரட்டிப்பாகியது. திரைமறைவில் இரகசியமாகச் சில காய்நகர்த்தல்களை அவை மேற்கொண்டன.

விளைவாக, இன அழிப்புக்கான சர்வதேச நீதிகோரும் தீர்மானத்தை நிறைவேற்றிய நீதியரசர் விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது நோக்கி இவர்களின் கூட்டு நகர்வு 2017 ஆம் ஆண்டில் வெளிப்பட்டது.

இதன் விளைவாக மிகுந்த நெருக்கடியான சூழல் ஏற்பட்டபோது, யாழ்ப்பாணத்தில் ஓர் இளைஞர் படை முதலமைச்சருக்கு ஆதரவாகத் திரண்டதும், மக்கள் மத்தியில் உருவாகிய கருத்துருவாக்கத்தின் விளைவாக அவருக்கு எதிரான சதி நடவடிக்கை முறியடிக்கப்பட்டதும் பலருக்கு நினைவிருக்கலாம்.

இப் பின்னணியில் 2025 இல் நடக்கவிருப்பது என்ன?

இமாலய பிரகடணத்தை ஒத்த செயற்பாடுகளுக்கு மீண்டும் களம் அமைக்கப்படுகிறது போல் தெரிகிறது.

குறிப்பாக ஜேர்மனியைத் தளமாகக் கொண்டு இயங்கும்  என்ற அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று புலம்பெயர் ஈழத்தமிழர்களை வளைத்துப் போட்டுத் தமிழ்த் தேசியத்தை அங்கீகரிப்பது போல அதை நீர்த்துப்போகச் செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தது.

அதில் நீண்டநாட்களாக பணிபுரியும் பெண் ஆய்வாளர் ஒருவரும் இன்னொருவருமாகச் சேர்ந்து ஆய்வு நிறுவனம் ஒன்றை 2016 ஆம் ஆண்டில் மேற்கொண்டிருந்தனர்.

இந்த ஆய்வில் இலங்கை தொடர்பாக எதுவும் பேசப்படவில்லை. மியான்மார், தெற்கு தாய்லாந்து, லெபனான், கொலம்பியா, கென்யா, மாலி ஆகிய இடங்களில் மத நிறுவனங்களை எவ்வாறு அமைதிச் செயற்பாடுகளில் ஈடுபடுத்தலாம் என்பதற்கான தரவுகளையும் முன்னோடிப் பரிசோதனைகளையும் அடிப்படையாகக் கொண்டு குறித்த கருத்திட்டம் தயாரிக்கப்பட்டது.அக் கருத்திட்டமே இலங்கை தொடர்பான இமாலயப் பிரகடனமாக 2023 இல் வெளிப்பட்டுள்ளது. இதில் ஜேர்மனியின் அந்த அரச சார்பற்ற நிறுவனம் பின்னணியாக இருந்தது.

காரணம் என்னவெனில், ஏற்கனவே பௌத்த தீவிரவாத தரப்புகளுக்கு குறித்த நிறுவனம் மீது கடுமையான ஐயம் உள்ளமையாகும்.

அதுமட்டுமல்ல, குறித்த நிறுவனம் கொழும்பில் இயங்கத் தடைவிதிக்கப்பட்டு ஒருகாலத்தில் ராஜபக்ச அரசினால் வெளியேற்றப்பட்டும் இருந்தது.

இப் பின்னணிகளை அறிந்து தமிழ்த் தேசியத் தரப்புகள் விழிப்படைந்து அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு விடலாம் என்றும், இதற்கு விளங்கியோ விளங்காமலோ சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்படக் கூடும் என்று தெரிந்தும், கொழும்பில் உள்ள சில தூதரகங்களின் மூலம் வேறு சில அணுகுமுறைகள் கடந்த சில வாரங்களாக நகர்த்தப்படுகின்றன.

அதாவது இன அழிப்புக்கான சர்வதேச விசாரணை என்ற கோரிக்கையை நீக்கம் செய்து அநுர அரசாங்கத்தை ஆதரித்து அல்லது நம்பிக்கை வைத்து செயற்படக்கூடிய அணுகுமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன.

அநுர அரசாங்கத்தின் மீது ஜெனீவா மனித உரிமைச் சபை நம்பிக்கை வைத்து  எதிர்வரும் ஒக்ரோபர் மாத அமர்வில் முழுமையான எழுத்துமூல அறிக்கையிடலில் தமிழ்த்தரப்பின்  கோரிக்கைகள் புறம் தள்ளப்படும் வாய்ப்புகள் உண்டு.

உள்ளகப் பொறிமுறை, போர்க்குற்ற விசாரணை, மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விவசாரணை என்ற அழுத்தங்களுடன் மாகாண சபைத் தோ்தலை நடத்த வேண்டும் என்ற அறிவிப்பு ஆணையாளரின் எழுத்து மூல அறிக்கையில் வெளிவரும் வாய்ப்புகள் உண்டு.

ஜேர்மன் மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளின் தூதரக மற்றும் அந்த நாடுகளை மையப்படுத்திய சில அரச சார்பற்ற நிறுவனங்களின் கடந்த சில நாட்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நகர்வுகளை அவதானித்தால், ஆணையாளரின் அறிக்கை எவ்வாறு அமையும் என்பது புரிகிறது.

ஆகவே, 2015 இல் நடந்த அதே கதை மீண்டும் அரங்கேறும் 2025 ஆம் ஆண்டுச் சூழலில் மேற்கின் ஆழ்நிலைத் தரப்புகள் பற்றி ஈழத்தமிழர்களின் கவனம் இருக்கவேண்டும்.

சீனா பக்கம் இலங்கை போனால் அமெரிக்கா ஈழத்தமிழர் பக்கம் வரும் என்று கணக்குப் போடுவதிலும், அல்லது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்படும் புவிசார் அரசியல் போட்டியில் ஈழத்தமிழர் விடயத்தை இந்தியா கையில் எடுக்கும் என்று கணக்குப் போடுவதிலும் கனவுக் கோட்டைகளைக் கட்டுவது அடிப்படையில் தவறானது.

அகமது ஹூசைன் அல்-சாரா எனும் பயங்கரவாத அல்-கைடா அமைப்போடு தொடர்புபட்ட பிரபல ஜிகாதியாக அறியப்பட்ட அல்-ஜூலானி என்பவரின் தலைக்கு பத்து மில்லியன் கொடையாக சில வருடங்களுக்கு முன் அறிவித்திருந்தது அமெரிக்கா. தற்போது, அப்படியான பயங்கரவாத ஜிகாதியோடு அதே அமெரிக்கா கைகோர்த்து சிரியாவில் ஆட்சிமாற்றத்தை கொண்டுவருகிறது.

சீனாவின் பிரமாண்டமான புவிசார் அபிவிருத்தித் திட்டமான ‘பெல்ட் அன்ட் றோட்’ முன்னெடுப்பு மத்திய கிழக்கில் முடக்கப்பட பயங்கரவாதிகளோடு கைகுலுக்குகிறது அமெரிக்கா.

இவ்வாறு மத்திய கிழக்கில் பயங்கரவாதிகளோடு கூட்டுவைத்து ஆட்சி மாற்றம் செய்யும் அமெரிக்காவுக்கு இலங்கையில் ஜே.வி.பியோடு கூட்டுவைப்பதொன்றும் வில்லங்கமான விடயமே அல்ல.

அ.நிக்ஸன்-

Share This