மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்

மும்பை அணியிலிருந்து விலகும் ஜெய்ஸ்வால்

இந்திய அணியின் நட்சத்திர தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மும்பை அணியிலிருந்து விலகவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளூர்ப் போட்டிகளில் மும்பை அணிக்காகவும், ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

கடந்த தொடர்களில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்தத் தொடர் சொல்லும் படியாக அமையவில்லை. 3 போட்டிகளில் வெறும் 30 ஓட்டங்களை மட்டுமே எடுத்துள்ளார்.

இவர் தற்போது மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் தடையின்மைச் சான்று கோரி விண்ணப்பித்திருப்பதாகவும், அது கிடைத்தவுடன் கோவாவுக்குச் செல்லவிருப்பதாகவும், 2025- 26 தொடரில் கோவா அணியை அவர் தலைமைத் தாங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

23 வயதான ஜெய்ஸ்வால் 2019 ஆம் ஆண்டு ஜனவரியில் சத்தீஸ்கருக்கு எதிரான போட்டியில் அறிமுகமானார். இதுவரை 36 போட்டிகளில் விளையாடி 12 சதம், 12 அரைசதம் உள்பட 3712 ஓட்டங்களை குவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் – கவாஸ்கர் தொடரில் சிறப்பாக விளையாடி ஒரு சதம், ஒரு அரைசதம் உள்பட 391 ஓட்டங்களை குவித்திருந்தார்.

யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், சித்தேஷ் லாட் ஆகியோரும் மும்பை அணியிலிருந்து விலகி கோவா அணிக்காக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Share This