உக்ரைய்னுக்கு மேலும் இராணுவ ஒத்துழைப்பு: நேட்டோ அமைப்பு தீர்மானம்
உக்ரைய்னுக்கு மேலும் இராணுவ உதவிகளை நேட்டோ அமைப்பு தீர்மானித்துள்ளது. நேட்டோ அமைப்பின் வெளிநாட்டு அமைச்சர்கள் நேற்றையதினம் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.
இதன்போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில் அமைப்பின் 75 வது ஆண்டு பூர்த்தியினை கொண்டாடியுள்ளனர்.இந்த அமைப்பின் ஊடாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கிடையில் அரசியல் மற்றும் பாதுகாப்பு விடயங்கள் பரிமாறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிகழ்வில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்டன் (Antony Blinken),நேட்டோ அமைப்பின் பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் (Jens Stoltenberg), நோட்டோவிற்கான அமெரிக்க தூதுவர் யூலியன் ஸ்மித் ( Julianne Smith) ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.
நேட்டோ அமைப்பு 12 உறுப்பினர்களுடன் ஆரம்பமானது.அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்கள் இதில் அங்கம் வகித்திருந்தனர்.
சோவியத் யூனியனால் ஐரோப்பிய நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுவதாக கூறி இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் பாதுகாப்பு தரப்பினர் கூட்டாக செயற்படவும், பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை ஏற்படுத்தவும் வழி ஏற்பட்டது.தற்போது நேட்டோ அமைப்பில் 32 நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பதக்கது.