“செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி காசாவை அழிக்கும் இஸ்ரேல்“: பல ஆயிரம் மக்கள் கொன்று குவிப்பு

OruvanOruvan

இஸ்ரேல் இராணுவம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Lavender AI) பயன்படுத்தி காசாவின் இலக்குகளை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக +972 இதழ் குற்றம்சாட்டியுள்ளது.

இதன்படி, லாவெண்டர் எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) திட்டத்தைப் பயன்படுத்தி

ஹமாஸ் அமைப்பின் 37,000 இலக்குகளை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) உறுப்பினர்களை அடையாளம் கண்டு அழிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

லாவெண்டருடன் இணைந்து, The Gospel’s எனப்படும் மற்றொரு செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பமும் பயன்படுத்தப்படுகிறது.

இது தனிநபர்களுக்குப் பதிலாக கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகளை இலக்குகளாகப் பரிந்துரைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அதிகளவு நேரத்தை மீதப்படுத்த முடிவதாக லாவெண்டரைப் பயன்படுத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அறிக்கைகளின்படி, லாவெண்டர் 90 சதவீதம் இலக்குகளை துல்லியமாக அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

+972 இதழின் படி, லாவெண்டர் மென்பொருள் மூலம் காசா பகுதியில் உள்ள 2.3 மில்லியன் மக்களின் தகவல்களை சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை இஸ்ரேல் போரில் பயன்படுத்திவருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மென்பொருள் மூலம் பாலஸ்தீனிய மக்கள் ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத்தின் இராணுவத்துடன் எத்தகைய ஈடுபாட்டைக் கொண்டுள்ளார்கள் என்பதையும் பகுபாய்வு செய்யப்பட்டு தகவல் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்பம், காசாவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒரு மதிப்பீட்டை வழங்குகிறது, இது அவர்கள் ஒரு போராளியாக இருப்பதற்கான வாய்ப்பைக் காட்டுகிறது.

இதனிடையே, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தப்படும்போது சில நேரங்களில் தவறாகப் பொதுமக்களைக் குறிவைக்க வழிவகுக்கும் என்பதையும் அறிக்கை வெளிப்படுத்துகிறது.

ஏனென்றால், லாவெண்டர் மனிதக் கட்டுப்பாட்டின்றி தானாகவே இயங்குகிறது, இதனால் பொது மக்கள் தொடர்பான சுயவிவரங்களைக் கொண்ட பலரை சாத்தியமான இலக்குகளாக ஆக்குகிறது.

கூடுதலாக, இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்ட நபர்களை அவர்கள் வீட்டில் இருக்கும் போது குறிவைத்ததாகவும் கூறப்படுகிறது.

அறிக்கைகளின்படி, உளவுத்துறை கண்ணோட்டத்தில் இருக்கும் நபர்களை அவர்களின் தனிப்பட்ட வீடுகளில் கண்டுபிடிப்பது எளிதாக இருப்பதால் இவ்வாறு செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்காக இஸ்ரேலிய இராணுவம் "Where's Daddy?" என்ற மற்றொரு செயற்கை நுண்ணறிவு அமைப்பைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த நபர்களைக் கண்காணிக்கவும், அவர்கள் தங்கள் குடும்பத்தினரின் வீடுகளில் இருக்கும்போது தாக்குதல்களை நடத்தவும் பயன்படுத்தப்படுகின்றது.

அறிக்கையின்படி, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) குறிப்பிட்ட வகை இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு அங்கீகாரம் அளிப்பதற்கு முன்பு எத்தனை பொதுமக்கள் கொல்லப்படலாம் என்பதற்கான விதிகளை அமைத்துள்ளனர்.

போரின் முதல் சில வாரங்களில், குறைந்த அளவிலான போராளிகளை இலக்காகக் கொண்ட வான்வழித் தாக்குதல்களின் போது 15 அல்லது 20 பொதுமக்களைக் கொல்ல அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.