அமெரிக்காவில் கோர விபத்து: தாயும், மகளும் பரிதாபமாக உயிரிழப்பு
அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியும் அவரது தாயும் உயிரிழந்தனர்.
கடந்த 30 ஆம் திகதி கிளாக்காமாஸ் கவுண்டியில் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இதில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் தாயார் 32 வயதான கக்கேரா கீதாஞ்சலி என அடையாளம் காணப்பட்டுள்ளார், மேலும் காயமடைந்தவர்கள் அவரது கணவர் நரேஷ்பாபு காமத்மன் (36) மற்றும் அவர்களது மகன் ஆவார்.
ஆந்திர மாநிலம் கொனகாஞ்சி கிராமத்தைச் சேர்ந்த கீதாஞ்சலி மற்றும் நரேஷ்பாபு இருவரும் மென்பொருள் பொறியாளர்கள் ஆவர்.
ஓரிகான் 211 நெடுஞ்சாலையில் பயணித்த மற்ற வாகனத்துடன் இந்த குடும்பத்தினர் பயணித்த கார் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவத்தின் போது ஓரிகான் 211 நெடுஞ்சாலையில் சுமார் ஐந்து மணி நேரம் மெதுவான போக்குவரத்து இருந்ததாகவும் ஓரிகான் மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மகள் சம்பவ இடத்திலேயே இறந்தார், கீதாஞ்சலி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கீதாஞ்சலியின் பிறந்தநாளைக் கொண்டாட குடும்பத்தினர் கோவிலுக்குச் சென்றிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் அஸ்தியை இறுதிச் சடங்குகளுக்காக சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.