தெற்காசியாவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதில்லை: வளர்ச்சியடையும் இந்தியாவின் பொருளாதாரம்

OruvanOruvan

தெற்காசிய நாடுகள் வேலை வாய்ப்புகள் உருவாக்குவதில் பின்தங்கியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்றவாறு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. இதனால் அந்த வட்டாரத்தில் பாரியளவில் தொழில்வாய்ப்பு பிரச்சினைகளும் பிரிவுகளும் ஏற்படும் எனவும் உலக வங்கி அச்சம் வெளியிட்டுள்ளது.

“வேலைகள் கிடைத்தால் மக்களின் வளர்ச்சி அதிகரிக்கும். ஆனால், அண்மையில் வேலையில் இருப்போரின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டு வருகிறது” என்றார் உலக வங்கியின் தலைமை பொருளியல் வல்லுநர் ஃபிரான்சிஸ்கா ஒசார்ஜ்.

2000க்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 10 மில்லியன் வேலைகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், 19 மில்லியனுக்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்புகள் அவசியமாக உள்ளது.

தற்போது தொடங்கியுள்ள நிதியாண்டில் தெற்கு ஆசியாவின் வளர்ச்சி 6.1 % வரை இருக்கும் என கூறும் உலக வங்கி, இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் பொருளியல் வளர்ச்சி என்று கூறப்படுகிறது. இந்தியாவின் பொருளியல் 7 வீதம் வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்-19 நோய்த்தொற்றுக்குப் பின்னர் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக உள்ளது. இருப்பினும், தனியார் முதலீடுகளை ஈர்ப்பதில் இந்தியா பலவீனமாக உள்ளதாகவும் இதனால் புது வேலைகள் உருவாக்குவதில் அந்நாடு சிக்கல்களைச் சந்திப்பதாகவும் உலக வங்கி கூறுகிறது.

தெற்காசிய நாடுகள் அவற்றின் கொள்கைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து, புதிய வேலைகளை உருவாக்க வேண்டும் என உலக வங்கி வலியுறுத்தி இருக்கிறது.

இதேவேளை, இலங்கையில் வேலையின்மை விகிதம் அண்ணளவாக 5 வீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.