பால்டிமோர் பாலத்தின் முதல் பகுதி அகற்றம்: 200 டன் எடை

OruvanOruvan

அமெரிக்காவின் பால்டிமோரில் இடிந்து விழுந்த பாலத்தின் 200 டன் எடை கொண்ட மாபெரும் முதல் பகுதியை தொழிலாளர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்த கப்பல் மோதியதில் அந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்தது. பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தின் பாகங்கள் பகுதி, பகுதிகளாக வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 26ஆம் திகதியன்று ‘டாலி’ எனும் சரக்குக் கப்பல் மின்சாரத்தை இழந்து பாலத்தின்மீது மோதியதில் அது இடிந்துவிழுந்து ஆறு பேர் உயிரிழந்தனர்.

பாலத்தின் உடைந்த பாகங்கள் அகற்றப்படுவதால் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்கவும் முக்கியமான கப்பல் பாதையை மீண்டும் திறக்கவும் உதவும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

பாலத்தின் வடக்குப் பகுதியின் ஒரு பகுதி முதல் முறையாக ஞாயிறு இரவு வெட்டி மீட்கப்பட்டது என்று அமெரிக்க கடலோரக் காவல் படையின் செய்தித் தொடர்பாளர் கிம்பர்லி ரீவ்ஸ் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.

அகற்றப்பட்ட துண்டு தோராயமாக 200 டன் எடை இருக்கும். அந்தப் பகுதி ஒரு படகுக்கு மாற்றப்படும் என்றும் கூடுதல் துண்டுகள் நிரப்பப்பட்டவுடன் நிலத்தில் இடிபாடுகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

“இது நம்பமுடியாத சிக்கலான சூழ்நிலையாக இருந்தாலும் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது,” என்று ​​​​மேரிலாண்ட் ஆளுநர் வெஸ் மூர் குறிப்பிட்டுள்ளார்.