பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் தீவிர பாதுகாப்பு: வெளிநாட்டு பொலிஸ் மற்றும் இராணுவ உதவியை கோரும் பிரான்ஸ்

OruvanOruvan

France seeks security support

2024 ஆம் ஆண்டுக்கான கோடைகால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு பிரான்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

மோஸ்கோவில் இடம்பெற்ற தாக்குதலை தொடர்ந்து பிரான்ஸ் பாதுகாப்பு குறித்து தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவம், பொலிஸ் மற்றும் சிவில் பணியாளர்களை வழங்குமாறு பிரான்ஸ் 45 நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

எதிர்வரும் ஜூலை மதம் பிற்பகுதியில் இருந்து ஒகஸ்ட் மாதம் வரை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாளாந்தம் சுமார் 45,000 பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படைகள், 20,000 தனியார் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் சுமார் 15,000 இராணுவ வீரர்களை ஈடுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னாயத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், பிரான்ஸின் கோரிக்கைக்கு 35 நாடுகள் சாதகமாக பதிலளித்து வருவதாக அந்த நாட்டு அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2024 ஆம் ஆண்டு கோடைகால ஒளின்பிக் போட்டிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பிரான்ஸால் நிறுவப்பட்ட சர்வதேச கூட்டணியில் போலந்து ஆயுதப்ப்டுகளும் இணையுமென அந்தநாட்டு பாதுகாப்பு அமைச்சர் அறிவித்துள்ளார்.

மோப்ப நாய்களை கையாளுபவர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரை போலந்து அனுப்பிவைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரிட்டன் மற்றும் இத்தாலி உள்ளிட்ட ஏனைய ஐரோப்பிய நாடுகள் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளக்கூடிய பொலிஸாரை வழங்கவுள்ளதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் விளையாட்டுகளின் போது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தமது பாதுகாப்புப் பணியாளர்களை அனுப்பிவைக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.