மீன்பிடி கப்பலை சிறைபிடித்த கடற்கொள்ளையர்கள்: 12 மணி நேர போட்டத்தின் பின் 23 பேர் பாதுகாப்பாக மீட்பு

OruvanOruvan

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட ஈரானிய மீன்பிடிக் கப்பல் மற்றும் அதிலிருந்த 23 பணியாளர்கள் இந்திய கடற்படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடுமையான தந்திரோபாயங்களுடன் 12 மணி நேரம் போராடி, இந்திய கடற்படையினர் குறித்த கப்பலை மீட்டெடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 29 அன்று ஈரானியக் கொடியுடன் கூடிய FV AI-Kambar மீன்பிடி கப்பல் ஐஎன்எஸ் சுமேதா மற்றும் ஐஎன்எஸ் திரிசூல் ஆகிய கப்பல்களால் மீட்கப்பட்டதாக இந்திய கடற்படை தனது அறிக்கை தெரிவித்துள்ளது.

ஒன்பது ஆயுதமேந்திய கடற்கொள்ளையர்களால் கப்பல் கடத்தப்பட்டது. இதனையடுத்து குறித்த கப்பலை மீட்கும் பணிகள் நேற்று முதல் ஆரம்பமாகியிருந்தன.

சம்பவத்தின் போது, ​​இந்தியப் பெருங்கடலின் வடமேற்கில் ஏடன் வளைகுடா அருகே மீன்பிடிக் கப்பல் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல்சார் பாதுகாப்பையும், கடல்வழிப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், எந்த நாட்டினராக இருந்தாலும் சரி, இப்பகுதியில் உள்ள கடற்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்வதை இந்திய கடற்படை உறுதியளித்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்திய கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கடற்படைத் தலைவர் அட்மிரல் ஆர். ஹரி குமார் இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்தார்.

மேலும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தை பாதுகாப்பதற்கு இராணுவம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கடற்கொள்ளையர் எதிர்ப்பு, ஏவுகணை எதிர்ப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடற்படை நடத்தியுள்ளது.

கடந்த 100 நாட்களில், 45 இந்தியர்கள் மற்றும் 65 வெளிநாட்டினர் காப்பாற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.