பைடனின் நிலைப்பாட்டில் மாற்றம்: பாராட்டிய ஹமாஸ்

OruvanOruvan

ஐக்கிய நாடுகள் சபையில் அண்மையில் அமெரிக்கா, இஸ்ரேலின் நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

அது, அமெரிக்காவின் பங்காளிகள், விமர்சகர்கள் என இரு தரப்பினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கிட்டத்தட்ட ஆறு மாதங்களாகப் போர் தொடரும் சூழலில் முதல் முறையாக இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளது.

இஸ்ரேல் தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு குறிப்பிடத்தக்க வகையில் மாறியிருப்பதாக ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் நியூஸ்வீக் சஞ்சிகையுடன் நடைபெற்ற நேர்காணலில் கூறினார்.

அனைத்துலக அளவில் வரும் நெருக்குதல், உள்ளூரில் தலைதூக்கியுள்ள கவலை தரும் அம்சங்கள் ஆகியவை ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறியதற்கான காரணம் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.

ரமலான் மாதத்தில் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவதற்கான ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு மன்றத்தின் நகல் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பில் அமெரிக்கா கலந்துகொள்ளவில்லை.

அது, அமெரிக்காவின் நிலைப்பாட்டில் பெரிய மாற்றம் இடம்பெற்றுள்ளதைக் குறிப்பதாக நம்பப்படுகிறது.

இறுதியில் அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் அந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அமெரிக்காவின் அச்செயலை இஸ்ரேல் சாடியது.

இஸ்ரேலைச் சேர்ந்த உயரிய குழு ஒன்று வா‌ஷிங்டனுக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளவிருந்தது. வாக்கெடுப்புக்குப் பிறகு அத்திட்டம் கைவிடப்பட்டது.

அமெரிக்கா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாததையும் பொதுவாகவே அந்நாட்டின் கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் ஹமாஸ் வரவேற்றுள்ளது.

அமெரிக்கா இஸ்ரேலுக்கு முழு ஆதரவு வழங்கி வந்ததற்கு எதிராக ஹமாஸ் பல காலமாக கண்டனம் தெரிவித்திருக்கிறது.