ஒலிம்பிக்கிற்கு முன்னதாக பாரிஸில் இருந்து வெளியேற்றப்படும் குடியேற்றவாசிகள்: எதிர்ப்பை வெளியிட்ட ஓர்லியன்ஸ் மேயர்

OruvanOruvan

Migrant transfers from Paris

பிரான்ஸின் மத்திய பகுதியில் உள்ள ஓர்லியன்ஸ் நகரில் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 100,000 மக்கள் வாழும் ஓர்லியன்ஸ் நகரில் 500 இற்கும் மேற்றப்பட்ட குடியேற்றவாசிகள் வீடுகள் அற்றநிலையில் குடியேறியுள்ளதாக நகர மேயர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒவ்வொரு மூன்று வாரங்களுக்கு பாரிஸில் இருந்து ஓர்லியன்ஸ் நகருக்கு 30 முதல் 35 நபர்கள் வருகைத்தருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் டைபெறவுள்ள நிலையில், கூடாரங்களில் வசிக்கும் குடியேற்றவாசிகளை பிரான்ஸ் அரசாங்கம் வெளியேற்றிவருகிறது.

பாரிஸில் இருந்து வெளியேற்றப்படும் குடியேற்றவாசிகள் பெரும்பாலும் ஓர்லியன்ஸ் நகரில் குடியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வருகைத்தருவோருக்கு அரசாங்கத்தின் செலவில் ஹோட்டல்களில் மூன்று வாரகாலத்திற்கு தங்குமிட வசதி வழங்கப்படும் நிலையில், பின்னர் தங்களுக்கான தங்குமிடங்களை தேடிக்கொள்வது அவர்களின் பொறுப்பு என ஓர்லியன்ஸ் மேயர் தெரிவித்துள்ளார்.

பாரிஸ் நீண்டகாலமாக புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோரை ஈர்க்கும் பிரதான இடமாக அங்கம் வகிக்கின்றது.

பெரும்பாலும், ஆப்பிரிக்கா, தெற்காசியா அல்லது மத்திய கிழக்கு நாடுகள் இருந்து பாரிஸில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

இதன் காரணமாக பாரிஸ் நகரை அண்மித்துள்ள பாலங்கள் மற்றும் தரிசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சட்டத்திற்கு புறம்பான வகையில் கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன.

குறித்த கூடாரங்கள் அவ்வப்போது பொலிஸாரினால் அகற்றப்படுகின்ற போதிலும் மீண்டும் கூடாரங்கள் அமைக்கப்பட்டு வருவதனை அவதானிக்க முடிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2022 ஆம் ஆண்டு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆற்றிய உரையில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகளை வெளியேற்றும் யோசனைக்கு ஆதரவு தெரிவித்தார்.

இருப்பினும், வலதுசாரி மற்றும் தீவிர இடதுசாரி அரசியல்வாதிகள் இந்த யோசனைக்கு கண்டனம் தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.