உக்ரைன் அகதிகளை உள்வாங்குவதில் பின்னிற்கும் பிரான்ஸ்: காரணத்தை விளக்கும் ஆய்வாளர்கள்

OruvanOruvan

Ukrainian refugees

உக்ரைனில் இருந்து அகதிகளை உள்வாங்குவதில் பிரான்ஸ் ஏனைய ஐரோப்பிய நாடுகளைவிட மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் மீது ரஷ்யாவினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, சுமார் 4.3 மில்லியன் அகதிகளாக மாறியுள்ளனர்.

போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனியர்கள் ஐரோப்பா முழுவதும் பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதன்படி போலந்து, பின்லாந்து, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உக்ரைனிய அகதிகளுக்கு தஞ்சமளித்துள்ளதுடன், பணியில் ஈடுபடுவதற்கும் கல்வி பயில்வதற்கு உரிமை அளித்து வருகின்றன.

இருப்பினும், 64,720 உக்ரைனிய அகதிகள் தற்காலிக பாதுகாப்பில் இருப்பதாக கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸ் அறிவித்தது.

இந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் ஜெர்மன் 1.2 மில்லியனுக்கும் அதிகளவாக உக்ரைனிய அகதிகளுக்கு தஞ்சமளித்துள்ளதாக அறிவித்ததுடன், போலந்து சுமார் 1 மில்லியன் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளது.

இதன்படி, ஒப்பீட்டளவில் பிரான்ஸை விட ஏனைய நாடுகள் அதிகளவான அகதிகளுக்கு தஞ்சமளித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

போலந்து, பால்டிக், செக் குடியரசு, ஸ்லோவாக்கியா மற்றும் பல்கேரியா ஆகியவை தமது நாட்டு பிரஜைகளின் 1,000 பேருக்கு 25 அகதிகளுக்கு அனுமதியளித்துள்ளது.

இருப்பினும், பிரான்ஸ் 1,000 பேருக்கு ஒரு உக்ரைனிய அகதியை மாத்திரமே அனுமதிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், உக்ரைனுடனான புவியியல் அருகாமை, அகதிகளுக்கான நிதியுதவி மற்றும் சமூக வலைப்பின்னல் போன்ற காரணிகள் பிரான்ஸில் யுக்ரைனிய அகதிகள் உள்வாங்கப்படாமைக்கான காரணமாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.