தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம்: அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளுக்கு சுகாதார எச்சரிக்கை

OruvanOruvan

Health warning

தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அடிலெய்ட் நகரை சூழவுள்ள பல்வேறு பொது இடங்களில் நடமாடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுவர்கள் கடந்த வாரம் தமது பெற்றோர்களுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தெற்கு ஆஸ்திரேலிய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த வாரம் இவ்வாறான பொது இடங்களுக்கு சென்ற அம்மை நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், கைக்குழந்தைகள் நோய் அறிகுறிகள் குறித்து அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அண்மையில் வெளிநாடுகளில் இருந்து அடிலெய்ட் திரும்பிய சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கும் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு தெற்கு அவுஸ்திரேலியாவில் மூன்று அம்மை நோயாளர்கள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட சிறுவர்கள் கடந்த 15 ஆம் திகதி முதல் நேற்று (23) வரை அடிலெய்டில் உள்ள பொது இடங்களில் இருந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் காய்ச்சல், இருமல் மற்றும் தொண்டை புண், அரிப்பு போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்தியர்களை அணுகுமாரும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.