இணையத்தில் மாணவர்களின் சித்திரங்களை விற்க முயன்ற ஆசிரியர்: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

World news updates 24.03.2024

இணையத்தில் மாணவர்களின் சித்திரங்களை விற்க முயன்ற ஆசிரியர்

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில், மாணவர்களின் சித்திரங்களை அனுமதியின்றி இணையத்தில் விற்க முயன்றதாக அப் பாடசாலையின் ஆசிரியர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆசிரியரின் இந்த செயலினால் குறித்த மாணவர்களின் பெற்றோரால் 1.5 மில்லியன் டொலர்கள் நட்ட ஈடாக கேட்கப்பட்டுள்ளது.

வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு - கென்ய சுகாதார சேவை முடங்கும் அபாயம்

கென்யாவில் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார வல்லுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் 7,000 இற்கும் மேற்பட்ட வைத்திய நிபுணர்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், சில வைத்தியசாலைகளின் சேவைகள் முடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காசா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு

காசா மீது இஸ்ரேல் படைகள் மேற்கொண்ட வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். ரஃபா மற்றும் டெய்ர் எல்-பாலாவில் உள்ள குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கம் 35 கிலோமீற்றர் ஆழத்தில் இன்று அதிகாலை 6.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அவுஸ்திரேலியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.63 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.43 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

மொஸ்கோ தாக்குதல் - ரஷ்யாவில் இன்று தேசிய துக்கத்தினம்

மொஸ்கோவில் உள்ள அரங்கொன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை அடுத்து ரஷ்யாவில் இன்று தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 133 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் - ஹமாஸ் சமாதானத்துக்காக ஜெபம் - அழைப்பு விடுக்கும் கத்தோலிக்க ஆயர்களின் பேரவை

புனித தவக்கால வாரத்தின் தொடக்கத்திற்கு முந்தைய நாளான சனிக்கிழமையன்று, மத்திய கிழக்கில் அமைதிக்காகவும் இஸ்ரேல் - ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஜெபத்திற்கு அமெரிக்காவின் கத்தோலிக்க ஆயர்களின் பேரவை (USCCB) அழைப்பு விடுத்துள்ளது.

இந்தோனேசியா - ஜாபா தீவு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் ஜாபா தீவுக்கு வடக்குக் கடலோரப் பகுதியில் இன்று அதிகாலை கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நுரையீரல் புற்றுநோய்க்கான தடுப்பூசி கண்டுபிடிப்பு

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், பிரான்சிஸ் கிரிக் நிறுவனம் மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி விஞ்ஞானிகள் இணைந்து நுரையீரல் புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி வருகின்றனர்.நுரையீரல் புற்றுநோய் தடுப்பூசியை உருவாக்க ஆராய்ச்சியாளர்களுக்கு £1.7 மில்லியன் (இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ. 65 கோடி) நிதி வழங்கப்பட்டுள்ளது.

பசி மற்றும் தண்ணீர் இன்மையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் காசா மக்கள்

காசாவில் இடம்பெற்று வரும் உள்நாட்டு யுத்தம் காரணமாக பல இலட்சக்கணக்கானோர் பசி மற்றும் தண்ணீர் இன்மையால் பாதிக்கப்பட்டு மிகவும் சோர்வான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதெச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொஸ்கோ தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் நிச்சியம் தண்டிக்கப்படுவர் - புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள திரையரங்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டுபிடித்து உரிய தண்டனை வழங்குவதாக உறுதியளித்தார், மேலும் தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நான்கு துப்பாக்கி ஏந்தியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் உறுதிபடுத்தியுள்ளார்.