ரஷ்ய தாக்குதல் பற்றி ஏற்கெனவே எச்சரித்திருந்தோம்: வெள்ளை மாளிகை

OruvanOruvan

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 150க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், இத்தாக்குதல் தொடர்பாக ஏற்கெனவே ரஷ்ய அதிகாரிகளை எச்சரித்திருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடர்பாளர் ஆண்ட்ரெய் வாட்சன் கூறுகையில், “இம்மாதத் தொடக்கத்திலேயே மாஸ்கோவில் ஒரு திட்டமிட்ட தாக்குதல் நடத்த சதி செய்யப்படுவதாகவும், குறிப்பாக இசை நிகழ்ச்சியை குறிவைத்து சதி செய்யப்படுவதாகவும் ரஷ்ய அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசு தகவல் அளித்தது.

தீவிரவாத சதிச் செயல்களைப் பற்றி தகவல் கிடைத்தால் அதை நாடுகளுடன் பகிர்வதை கடமையாகக் கொண்டு அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவின்படி இத்தகையத் தகவல்களை அமெரிக்கா பகிர்ந்து வருகிறது.

அதன்படியே ரஷ்ய அதிகாரிகளுக்கும் நாங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தோம்” என்றார். அதேபோல் இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது நம்பகமானதுதான் என்றும் அமெரிக்க உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமையன்று இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 150 ஆக அதிகரித்துள்ளது.

150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சமீப ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த மிகக் கொடூர தீவிரவாத தாக்குதலாக இது அறியப்படுகிறது.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும் அதன் நம்பகத்தன்மை இன்னும் அரசுத் தரப்பில் உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்தத் தாக்குதலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடுமையாகக் கண்டித்துள்ளார். இந்நிலையில் தாக்குதல் பற்றி ரஷ்யாவுக்கு ஏற்கெனவே எச்சரித்திருந்தாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.