பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள்: 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆணுறைகளை விநியோகிக்க நடவடிக்கை

OruvanOruvan

free condoms

உலகவாழ் விளையாட்டு இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ஒலிம்பிக் போட்டி பிரான்ஸின் பாரிஸ் நகரில் எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாரிஸ் ஒலிம்பி விளையாட்டின் பொது 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆணுறைகளை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய்களை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாரிஸ் ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் முதலுதவி மற்றும் சுகாதார அபாயங்களை ஒருங்கிணைப்பு பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த ஆணுறைகளை எத்தனை பேர் பயன்படுத்துவார்கள் என்பது தெரியாது எனவும், தேவைக்கு ஏற்ப மாற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாரிஸின் வடக்கே செயிண்ட்-டெனிஸில் அமைந்துள்ள ஒலிம்பிக் கிராமத்தில் சுமார் 14,500 விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களது அணிகள் தங்கவைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பாலியல் ரீதியாக பரவும் தொற்றுநோய் தொடர்பில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுவதுடன், சுவரொட்டிகளும் ஒட்டப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

1988 ஆம் ஆண்டு சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின்போது விழிப்புணர்வை ஏற்படுத்தியத்தும் வகையில் விளையாட்டு வீரர்களுக்கு ஆணுறைகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன.

அன்று முதல் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளின் போதும் ஆணுறைகளை இலவசமாக விநியோகிப்பது வழக்கமாக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களாக விநியோகிக்கப்பட்டு வரும் ஆணுறைகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

இதன்படி, 1992 ஆம் ஆண்டு பார்சிலோனா ஒலிம்பிக் போட்டிகளின் பொது 50,000 ஆணுறைகள் விநியோகிக்கப்பட்டதுடன், 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் 100,000 ஆணுறைகளை, 2012 ஆம் ஆண்டு லண்டனில் 150,000 ஆணுறைகளை விநியோகிக்கப்பட்டுள்ளன.