update - மொஸ்கோ தாக்குதல்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133ஆக உயர்வு
மொஸ்கோ தாக்குதல் - உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 133ஆக உயர்வு
ரஷ்யாவின் மாஸ்கோ அருகே திரையரங்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 133 ஆக உயர்ந்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. அதன்படி, 140க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மொஸ்கோ தாக்குதலுடன் தொடர்புடைய 11 சந்தேகநபர்கள் கைது
மொஸ்கோ தாக்குதலுடன் தொடர்புடைய 04 துப்பாக்கிதாரிகள் உள்ளிட்ட 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது.
இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை
ரஷ்யாவின் மொஸ்கோவில் உள்ள திரையரங்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மொஸ்கோவில் இருந்து கிடைத்த தகவல்களின் படி இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (António Guterres) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல் வெறுக்கத்தக்க மற்றும் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ரஷ்யாவின் - மொஸ்கோவில் மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஐ கடந்துள்ளது.
மேலும் 115 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீவிரவாத தாக்குதல் குறித்த அமெரிக்காவின் எச்சரிக்கையை நிராகரித்த புடின்
மொஸ்கோவில் சாத்தியமான பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்த வொஷிங்டனின் முன் எச்சரிக்கை அறிவிப்பினை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நிராகரித்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில், ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மொஸ்கோவில் சாத்தியமான பயங்கரவாத தாக்குதல் குறித்து பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது.
அந்த எச்சரிக்கையில்,
மொஸ்கோவில் கச்சேரிகள் போன்ற பெரிய கூட்டங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் உடனடி தாக்குதலை நடத்த திட்டங்களை தீட்டியுள்ளனர்.
இதனால், அடுத்த 48 மணி நேரத்தில் பெரிய கூட்டங்களைத் தவிர்க்க குடிமக்கள் அறிவுறுத்தப்பட வேண்டும் என்று மார்ச் 7ஆம் திகதி அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்திருந்தது.
இந்நிலையில் இந்த கருத்துக்களை நிராகரித்த ரஷ்ய ஜனாதிபதி புடின், மொஸ்கோ ஊடகமான TASS க்கு மார்ச் 19ஆம் திகதியன்று தெரிவித்த அறிக்கையில்,
"ரஷ்யாவில் பயங்கரவாத தாக்குதல்களின் சாத்தியக்கூறுகள் குறித்து மேற்கத்திய பல அமைப்புகளின் அண்மைய அறிக்கைகளின் நோக்கம் ரஷ்ய சமுதாயத்திற்கு தீங்கு விளைவிப்பதாகும்.
இவ்வாறான கருத்துக்கள் அனைத்தும் நமது சமூகத்தை அச்சுறுத்தி சீர்குலைக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது என்று புடின் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்க மொஸ்கோவிலுள்ள அமெரிக்க தூதரகம் வெள்ளிக்கிழமையும் மற்றொரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், தாக்குதல் பற்றி நன்கு தெரியும், அதனால் ரஷ்யாவிலுள்ள அமெரிக்கர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு வலியுறுத்தியது.
எவ்வாறெனினும், அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
வெள்ளிக்கிழமை தாக்குதலை தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ் சம்பவத்துக்கு பொறுப்பேற்றுக் கொண்டது.
பயங்கரவாதக் குழுவுடன் தொடர்புடைய ஒரு செய்தி நிறுவனம் டெலிகிராமில் ஒரு இடுகையின் படி, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் Islamic State-Khorasan, அல்லது ISIS-K இன் ஒரு பிரிவானது தாக்குதலுக்கு பெறுப்பேற்றது.
இந்த குழு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈரானில் செயல்படுவதாக அறியப்படுகிறது, மேலும் ரஷ்யாவிற்குள் செயல்படுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.
மொஸ்கோவின் புறநகரில் உள்ள கச்சேரி அரங்கில் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) இரவு ஆயுதமேந்திய குழு ஒன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 145 பேர் காயமடைந்தனர்.
இது சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதலில் காயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் ஆபத்தான நிலையில் இருப்பதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
40 பேர் பலி, 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்
மொஸ்கோ அருகே உள்ள அரங்கில் வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் 40 பேர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் ரஷ்யாவின் பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத தாக்குதல் என குறிப்பிட்டு ரஷ்ய அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் இந்த தாக்குதல், சமீபத்திய ஆண்டுகளில் ரஷ்யாவில் நடந்த மிக மோசமான தாக்குதல் ஆகும்.
மொஸ்கோவிற்கு அருகே துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்பு
மொஸ்கோவிற்கு அருகில் உள்ள அரங்கில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக அவசர சேவைகளை மேற்கோள் காட்டி ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உருமறைப்பு உடையில் இருந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தால் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் வெடிப்பும், அதைத் தொடர்ந்து தீப்பரவலும் ஏற்பட்டுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மொஸ்கோவின் மேற்கு எல்லைப் பகுதியில் உள்ள க்ரோகஸ் சிட்டி அரங்கில் பாரிய தீவிபத்தை ஏற்படுத்திய தாக்குதலாளிகள் வெடிபொருட்களையும் பயன்படுத்தியதாக ரஷ்ய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தின் சேத விபரங்கள் தெரியவரவில்லை. மொஸ்கோ பிராந்தியத்தின் ஆளுநர், தான் அந்தப் பகுதிக்குச் சென்று நிலைமையை சமாளிக்க ஒரு பணிக்குழுவை அமைத்ததாகக் கூறினார்.
எனினும், அவர் உடனடியாக கூடுதல் விவரங்களை வழங்கவில்லை.
மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதால், அப்பகுதிக்கு கலகத் தடுப்புப் பிரிவுகள் அனுப்பப்பட்டு வருவதாக ரஷ்ய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.