பிரித்தானிய இளவரசி புற்றுநோயால் பாதிப்பு: தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கோரிக்கை

OruvanOruvan

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கீமோதெரபிக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த காணொளி புதன் கிழமை பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இன்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் அறுவைச் சிகிச்சை ஒன்றுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது முதல் இளவரசி கேட் இருக்கும் இடம் மற்றும் உடல்நிலை தொடர்பில் பல்வேறு வதந்திகள் வெளியாகின.

இந்நிலையிலேயே, தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் எந்த வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை.

எவ்வாறாயினும், தனக்கு சிகிச்சை அளிக்கும் போது "நேரம், இடம் மற்றும் தனியுரிமை" தொடர்பில் மதிப்பளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

"நான் நன்றாக இருக்கிறேன்," என்று அவர் தெரிவித்துள்ளார். "தான் குணமடைய உதவும் விடயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு நாளும் வலுவடைகிறேன்." என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

42 வயதான கேட் மிடில்டன் கடந்த கிறிஸ்துமஸ் முதல் இந்த வாரம் வரையில் பொதுவெளியில் தோன்றவில்லை.

கென்சிங்டன் அரண்மனை கேட்டின் உடல்நிலை குறித்து சிறிய விவரத்தை அளித்தது.

எனினும், அது புற்றுநோயுடன் தொடர்புடை அறிக்கையல்ல. கடந்த மாதம் மன்னர் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

75 வயதான மன்னர் சார்லஸ், புற்றுநோய் சிகிச்சையில் இருந்தபோது பொதுப் பணிகளில் இருந்து விலகியிருந்தார்.

இருப்பினும் அவர் அரசாங்க அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தும் புகைப்படங்களில் அடிக்கடி தோன்றினார்.

எனினும், இளவரசி கேட் மிடில்டன் பொதுவெளியில் தோன்றவில்லை. இது பல வாரங்களாக ஊகங்கள் மற்றும் வதந்திகளுக்கு வழிவகுத்தது.