யுக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் - மூவர் உயிரிழப்பு: உலகின் முக்கிய செய்திகள் ஒரே பார்வையில்...

OruvanOruvan

Short Story - World News

யுக்ரேன் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் - மூவர் உயிரிழப்பு

யுக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர்.இந்த தாக்குதல் யுக்ரேனின் வடக்கு நகரமான கார்கிவில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் ஐவர்,தாக்குதலின் போது காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அயர்லாந்து பிரதமர் பதவி விலகினார்

அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதுடன் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அடிக்கடி உணவை தவிர்ப்பவர்களை விரைவில் பாதிக்கும் இதய நோய்

உடல் பருமனை குறைக்க நாளொன்றுக்கு 16 மணிநேரம் வரை சாப்பிடாமல் விட்டு மீதமுள்ள 8 மணிநேரத்தில் சாப்பிடும், Intermittent fasting என்ற நடைமுறையை பின்பற்றுவோருக்கு 91 வீதம் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக “தி அமெரிக்கா“ இதய கூட்டமைப்பு மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.

வியட்நாம் ஜனாதிபதி ராஜினாமா!

வியட்நாம் ஜனாதிபதி வோ வான் தோங் (Vo Van Thuong) பதவி விலகினார். இந்த பதவி விலகலை கம்யூனிசக் கட்சியும் ஏற்றுக்கொண்டுள்ளது. நாட்டின் மீதான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தக்கவைத்துக் கொள்ள முடியாத நிலையினாலும் கம்யூனிசக் கட்சியின் சட்டதிட்டங்களை மீறிய காரணத்தினாலும் அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் கம்யூனிசக் கட்சி அவரது ராஜினாமாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

உலகில் மகிழ்ச்சியான நாடு பின்லாந்து

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐ.நா. வெளியிட்டுள்ளது. இதில் பின்லாந்து நாடு தொடர்ந்து 7ஆவது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளன.

உலகில் பருவநிலை மாற்றம்- மோசமடையும் அறிகுறிகள்

முன்னெப்போதும் இல்லாத அளவு 2024 ஆம் ஆண்டு வெப்பம் உச்சத்தை தொடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். கடந்த ஆண்டைவிடவும் கடுமையான வெப்பம் நிறைந்த ஆண்டு 2024 என்று உலக வானிலை ஆய்வக அமைப்பு தெரிவித்துள்ளது. பெருங்கடல்கள் கொதிப்பது, கடலில் பனிக்கட்டிகள் உருகுவது, பனியோடைகள் சுருங்குவது ஆகியன பருவநிலை மாற்றத்துக்கு முக்கியக் காரணங்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இ - சிகரெட் பாவனைக்கு தடை விதித்த நியூசிலாந்து!

இ- சிகரெட்டை பயன்படுத்த நியூசிலாந்து அரசாங்கம் தடை விதித்துள்ளது. அதுமட்டுமின்றி 18 வயதுக்குட்பட்டோருக்கு இ-சிகரெட்டினை விற்பனை செய்தால், விற்பனை செய்தவருக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது..

பாகிஸ்தான் நிலக்கரி சுரங்க வெடிப்பில் 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தானிலுள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் வெடிப்பு ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுரங்கத்தில் வெடிப்பு ஏற்பட்டபோது குறித்த பகுதியில் 20 பேர் இருந்தாகவும் அவர்களில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேரை உயிருடன் மீட்டிருப்பதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பண மோசடி

கனடாவில் ரொறன்ரோவைச் சேர்ந்த குர்டிப் சஹப்ஹார்வல் என்பவர், செயற்கை நுண்ணறிவினால் செயல்படுத்தப்படும் கிறிப்டோ கரன்ஸி மூலம் சுமார் 17000 டொலர்களை இழந்துள்ளார். கிறிப்டோ நாணயத்தில் முதலீடு செய்வதாக எண்ணி தாம் பணப்பை வைப்பிலிட்டதாகவும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி குறித்த பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் வீட்டில் சோதனை

தென்னாபிரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் Nosiviwe Mapisa-Nqakula வுக்கு எதிரான ஊழல் விசாரணையின் ஒரு பகுதியாக, புலனாய்வாளர்கள் அவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். சபாநாயகர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாகவே விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றிய ஹொங்கொங்

கடுமையான பாதுகாப்பு சட்டத்தை ஹொங்கொங் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டமானது நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு அவசியமென அதிகாரிகள் குறிப்பிடுகின்ற போதிலும், சிவில் உரிமைகள் பாதிக்கப்ப்படுமென விமர்சகர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

டெக்சாஸ் எல்லை அமுலாக்கச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அமெரிக்க உயர் நீதிமன்றம் அனுமதி

குடியரசுக் கட்சியின் ஆதரவு பெற்ற டெக்சஸ் (Texas) எல்லை அமுலாக்கச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்க உயர் நீதிமன்றம் அனுமயளித்துள்ளது. இந்த சட்டமானது அமெரிக்க-மெக்சிகோ எல்லையை சட்டவிரோதமாக கடப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களைக் கைது செய்வதற்கு அனுமதி அளிக்கின்றது.