யூதர்கள் இஸ்ரேலை வெறுக்கிறார்கள்: தேர்தல் நெருங்கும் வேளையில் டிரம்ப் சர்ச்சை கருத்து

OruvanOruvan

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியும் இந்தாண்டு நடைபெற உள்ள ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக கருதப்படுகிற டொனால்ட் டிரம்ப், யூதர்கள் யாரெல்லாம் ஜனநாயக கட்சிக்கு ஆதரவளிக்கிறார்களோ அவர்கள் இஸ்ரேலை வெறுக்கிறார்கள் எனத் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஸாவில் இஸ்ரேலின் தாக்குதலால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை ஜனநாயகக் கட்சியினர் அடிக்கடி விமர்சிப்பது குறித்து டிரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த டிரம்ப், “அவர்கள் இஸ்ரேலை வெறுக்கிறார்கள் என நினைக்கிறேன். ஜனநாயகக் கட்சி இஸ்ரேலை வெறுக்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், “யூதர்கள் யாரெல்லாம் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள் தங்கள் மதத்தை வெறுக்கிறார்கள்.

அவர்கள் இஸ்ரேலைப் பற்றிய அனைத்தையும் வெறுக்கிறார்கள். இஸ்ரேல் அழிவதைக் குறித்து அவர்கள் வெட்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பெரும்பாலான அமெரிக்க யூதர்கள் ஜனநாயகக் கட்சியினராக கருதப்படும் நிலையில் டிரம்பின் இந்தக் கருத்து உடனடியாக ஜனநாயகக் கட்சியினராலும் யூத தலைவர்களாலும் விமர்சிக்கப்பட்டுள்ளது.

பைடனின் அரசியல் பிரசார முகமை, “இங்கு வெட்கப்பட வேண்டிய ஒரே ஆள் டிரம்ப்தான். இந்த நவம்பரிலும் தோற்கப் போவது டிரம்ப் மட்டும்தான்.

அமெரிக்கர்கள் டிரம்பின் வெறுப்பு பிரசாரம், தனிநபர் தாக்குதல்கள், அதிதீவிர முன்னெடுப்புகளை வெறுக்கிறார்கள்” எனத் தெரிவித்துள்ளது.