நடுவானில் தற்கொலைக்கு முயன்ற பயணி: அவசரமாக லண்டனில் தரையிறக்கப்பட்ட விமானம்

OruvanOruvan

பயணி ஒருவர் நடுவானில் தற்கொலைக்கு முயன்றதை அடுத்து, லண்டன் நோக்கிச் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற EVA ஏர் விமானத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்கத் தொடங்கியபோது, பயணி ஒருவர் கழிப்பறைக்குள் இருப்பதைக் விமானப் பணியாளர்கள் குழு உறுப்பினர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதன்போது குறித்த நபர் தற்கொலைக்கு முயற்சித்திருந்த நிலையில், அவருக்கு காயமும் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டு, விமானம் தரையிறங்கியதும் பயணி வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் திகதி BR67 என்ற பாங்காகில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற விமானத்தில் இந்த சம்பவம் நடந்ததாக EVA Air உறுதிப்படுத்தியுள்ளது.

கண்காணிப்பு தளமான FlightAware இன் படி, விமானம் லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 17 நிமிடங்கள் முன்னர் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமான நிறுவனம் அந்த நபரின் அடையாளத்தை வெளியிடவில்லை என்பதுடன் அந்த நபரின் காயங்கள் குறித்து கருத்து தெரிவிக்கவில்லை என்று டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.