மன்னர் சார்லஸ் தொடர்பில் தகவல்: பிரித்தானிய தூதரகம் அவசர அறிக்கை

OruvanOruvan

King Charles

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் அதிகாரபூர்வ அவசர அறிக்கை ஒன்றை உக்ரைனில் உள்ள பிரித்தானிய தூதரகம் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்று நோய் காரணமாக தனது 75வது வயதில் உயிரிழந்துவிட்டதாக ரஷ்ய ஊடகங்கள் மற்றும் அவற்றின் சமூக ஊடகக் கணக்குகளில் அறிவிக்கப்பட்டிருந்தன.

அத்துடன், மன்னர் சார்லஸின் 'எதிர்பாராத மரணம்' என்று பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெளியிடப்பட்டதாக கூறப்படும் போலி அறிக்கை ஒன்றின் படமும் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டது.

"பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது 75 வயதில் உயிரிழந்துவிட்டதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன" என்று ரஷ்ய செய்தித்தாள் ஸ்புட்னிக் குறிப்பிட்டிருந்தது.

எதிர்பாராத விதமாக பிரித்தானிய மன்னர் சார்லஸ் நேற்று பிற்பகல் உயிரிழந்ததாக ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இது குறித்து அரச குடும்பத்தின் இணையதளத்திலோ அல்லது பிரித்தானிய ஊடகங்களிலோ எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையிலேயே, பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தும் அதிகாரபூர்வ அறிக்கையை உக்ரைனில் உள்ள பிரித்தானிய தூதரகம் வெளியிட்டுள்ளதாக Daily Mail குறிப்பிட்டுள்ளது.