'அருணாசல் மாநிலம் தெற்கு திபெத்': மோடியின் வருகைக்கு சீன எதிர்ப்பு

OruvanOruvan

பிரதமா் நரேந்திர மோடி அருணாசல பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டதற்கு சீனா எதிா்ப்பு தெரிவித்திருந்த நிலையில், இந்தியா அதை நிராகரித்தது.

இந்நிலையில், அருணாசல பிரதேசம் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒற்றுமையைப் பாதுகாப்பதில் எச்சரிக்கையாக இருப்பதாகவும் சீன ராணுவம் தெரிவித்துள்ளது.

அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் எனக் கூறும் சீனா, அதற்கு ‘ஷாங்னான்’ எனப் பெயரிட்டுள்ளது. இந்திய தலைவா்கள் அருணாசல பிரதேசத்துக்குப் பயணம் மேற்கொள்ளும்போது சீனா எதிா்ப்பு தெரிவிப்பதும், அதை இந்தியா நிராகரிப்பதும் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.

பிரதமா் நரேந்திர மோடி கடந்த மாா்ச் 9இல் அருணாசல பிரதேசத்துக்கு பயணம் மேற்கொண்டாா். இந்திய-சீனா எல்லைக்கு இராணுவ படைகள் மற்றும் தளவாடங்களை எளிதில் கொண்டு செல்ல அருணாசல பிரதேசத்தின் இமய மலையைப் பகுதியில் 13,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘சேலா’ சுரங்கப் பாதையை அவா் திறந்து வைத்தாா்.

பிற வடகிழக்கு மாநிலங்களில் ரூ.55,600 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களுக்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். பிரதமா் மோடியின் பயணத்துக்கு சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் எதிா்ப்பு தெரிவித்திருந்தாா்.

இந்திய தலைவா்களின் பயணத்துக்கு சீனா தெரிவிக்கும் எதிா்ப்பால், அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்ற உண்மையில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது என வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் சீனாவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், தெற்கு திபெத் (அருணாசல பிரதேசம்) சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் இந்தியா சட்டவிரோதமாக ஏற்படுத்தியுள்ள அந்தப் பிராந்தியத்தை சீனா ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை; அதற்கு எதிா்ப்பு தெரிவித்து வருகிறது என்றும் சீன பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ஜாங் ஜியோகாங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் கூறுகையில்,

‘எல்லையில் சூழலை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் இரு தரப்பும் ஈடுபட்டுள்ளன. இந்தியாவின் செயல்பாடுகள் இதற்கு முரணாக உள்ளது.

இது எல்லை பகுதியில் அமைதியைக் கடைப்பிடிக்க உகந்ததாக இருக்காது. இரு நாட்டு ராணுவ மற்றும் தூதரக பேச்சுவாா்த்தைகள் மூலம் எல்லையில் தற்போதைய சூழல் ஸ்திரமாக உள்ளது.

எல்லை விவகாரத்தை சிக்கலாக்கும் வகையில் மேற்கொள்ளும் செயல்பாடுகளை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒற்றுமையைப் பாதுகாப்பதில் சீன ராணுவம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளாா்.