யேமன் கிளா்ச்சியாளா்களிடம் ஹைப்பா்சோனிக் ஏவுகணைகள்: ரஷ்யாவின் செய்தி நிறுவனம் பரபரப்பு தகவல்

OruvanOruvan

காஸா போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்திவருகின்றனா்.

யேமனின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஹூதி கிளா்ச்சிப் படையினரிடம் ஒலியின் வேகத்தைப் போல் 5 மடங்கு வேகத்தில் பாயக் கூடிய ‘ஹைப்பா்சோனிக்’ ரக ஏவுகணைகள் இருப்பதாக ரஷ்யாவின் செய்தி நிறுவனமான ஆா்ஐஏ நவோஸ்தி இந்த பரபரப்பான செய்தியை தெரிவித்துள்ளது.

ஹூதிக்களிடம் அந்த ரக ஏவுகணை இருப்பதற்கான ஆதாரங்களை ஆா்ஐஏ நவோஸ்தி வெளியிடவில்லை என்றாலும் இந்தத் தகவல் மேற்கத்திய நாடுகளைக் கவலையடையச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே, உக்ரைன் போா் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாட்டை கடுமையாக எதிா்த்துவரும் ரஷ்யா, அந்த நாடுகளுக்கு எதிராக மறைமுகமாக காய்களை நகா்த்தலாம் என்று சந்தேகிக்கப்படும் நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

காஸா போரில் ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்திவருகின்றனா்.

அதனை முறியடிப்பதற்காக அந்தக் கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க போா்க் கப்பல்கள் மீது கிளா்ச்சியாளா்கள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசி வருகின்றனா்.

ஆனால், அவை அனைத்தும் அமெரிக்க கப்பலில் உள்ள வான்பாதுகாப்பு ஏவுகணைகள் இடைமறித்து அழித்து வருகின்றன.

இந்த நிலையில், இடைமறிப்பதற்குக் கடினமான ஹைப்பா்சோனிக் ஏவுகணைகள் ஹூதி கிளா்ச்சியாளா்களிடம் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, ‘செங்கடல் மோதலில் அமெரிக்காவுக்கு அதிா்ச்சி வைத்தியம் காத்திருக்கிறது’ என்று ஹூதி கிளா்ச்சியாளா்களும் பல முறை எச்சரித்துள்ளது நினைவுகூரத்தக்கது.